வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா நேற்றுச் செவ்வாய்க்கிழமை(05) பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
காலை முருகப்பெருமானுக்கு விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து விநாயகப் பெருமான், சந்நிதி வேற்பெருமான், ஆறுமுக சுவாமி ஆகிய முத்தெய்வங்களும் வீதி வலம் வந்து முற்பகல்- 10 மணியளவில் முத்தெய்வங்களும் முத்தேர்களில் எழுந்தருளினர்
சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டு விசேட தீபாராதனை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பக்தர்களின் அரோகராக் கோஷம் முழங்க முற்பகல்-10.30 மணியளவில் முத்தேர் பவனி ஆரம்பமாகியது.
விநாயகப்பெருமானின் தேர் முன்னே செல்ல சந்நிதி வேற்பெருமானின் பிரதான தேர் வீதி வலம் இடம்பெற்றது. முற்பகல்- 11.30 மணியளவில் முத்தேர்களும் இருப்பிடத்தைச் சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
நூற்றுக் கணக்காண ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்சணை செய்தும், பறவைக்காவடிகள், செதில் காவடிகள் என்பன எடுத்தும், பெண் அடியவர்கள் அடியளித்தும், பாற்காவடிகள் எடுத்தும் நேர்த்திக் கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர்.
தேர்த் திருவிழாவில் குடாநாட்டின் பல பாகங்களிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும், புலம்பெயர் தேசங்களிலிருந்தும் வருகை தந்த இலட்சக்கணக்கான அடியவர்கள் பக்திப்பெருக்குடன் கலந் து கொண்டனர்.
தேர்த் திருவிழாவில் கலந்து கொண்ட அடியவர்களின் தாகம் தீர்க்கும் வகையில் ஆலயச் சூழலிலும், ஆலயத்திற்குச் செல்லும் வீதிகளின் பல்வேறு பகுதிகளிலும் தாக சாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன் ஆலயச் சுழலிலுள்ள சந்நிதியான் ஆச்சிரமம் உட்படப் பல்வேறு மடங்களிலும் அடியவர்களுக்கு அன்னதானமும் பரிமாறப்பட்டன.
பக்தர்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் சாரணர்கள், சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவிப்படையினர் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்புக் கடமைகளில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.
ஆலயத் தேர்த் திருவிழாவை முன்னிட்டு இன்றைய தினம் நெல்லியடி வர்த்தக சங்க எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்களிற்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களின் வசதி கருதி தொண்டைமானாறு நீரேரியூடாக தற்காலிக மண்பாதை அமைக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனுமதியுடன் மண் பாதையூடாக பக்தர்கள் ஆலயத்திற்குச் சென்று வருவதற்கான வசதிகளை வலி. கிழக்குப் பிரதேச சபை ஏற்படுத்திக் கொடுத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment