வடகிழக்குத் தமிழர் தாயகத்தில் மீண்டும் மீண்டும் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்துக் கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகள் மற்றும் தாக்குதல்கள்,அச்சுறுத்தல்கள் போன்றன இலங்கை அரசு பேசிக்கொண்டிருப்பது போன்று ஊடக சுதந்திரத்தை மேம்படுத்த உதவப்போவதில்லை என யாழ். ஊடக அமையம் தெரிவித்துள்ளது. இது குறித்து யாழ்.ஊடக அமையம் தனது கடும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக யாழ்.ஊடக அமையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சனிக்கிழமை(09) முல்லைத்தீவு தண்ணீமுறிப்புப் பகுதியில் சிங்கள மயமாக்கல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இராணுவம், பொலிஸால் சுற்றிவளைக்கப்பட்டு அரை மணித்தியாலங்களுக்கு மேல் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். குறித்த செய்தி தொடர்பில் ஊடகவியலாளர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை அழித்த பின்னர் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு சென்ற கு.செல்வக்குமார், சு.பாஸ்கரன் த.பிரதீபன், த.வினோஜித், வி.கஜீபன், சி.நிதர்சன், க.ஹம்சனன், க.சபேஸ் ஆகிய ஊடகவியலாளர்களே இவ்வாறு அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு சிங்கள மயமாவது தொடர்பில் செய்தி மற்றும் ஆவணப்படுத்தல் செய்வதற்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் சென்றிருந்தனர். இதன் போது அவர்கள் தண்ணீர் முறிப்பு பகுதிக்கும் சென்றிருந்தனர். இலங்கை இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டவேளை ஊடகவியலாளர்கள் தம்மை அடையாளப்படுத்தியுள்ளனர். இருப்பினும், அவர்களை அங்கு தடுத்து வைத்த இராணுவம் தொடர்ந்தும் அவர்களை விசாரணைக்குட்படுத்தியுள்ளது.
திட்டமிட்ட வகையில் 'தேசிய பாதுகாப்பு' எனும் பேரில் பேணப்படும் படைமுகாம்கள் குடியேற்றத்திட்டங்களிற்கானதென் பதும் அதனை ஊடகங்கள் வெளிக்கொணரக்கூடாதென்பதையும் இந்த அரசு விரும்புகின்றதென்பது மீண்டுமொரு முறை உறுதியாகியுள்ளது.
இதேவேளை, சாவகச்சேரிப் பகுதியில் வைத்து இலங்கை ஒலிரப்புக் கூட்டுத்தாபன ஊடகவியலாளர் எஸ்.மனோகரனும் மற்றும் பொன்னாலைப் பகுதியில் வைத்து சிரேஷ்ட ஊடகச் செயற்பாட்டாளர் ந.பொன்ராசாவும் தாக்குதல்களிற்குள்ளாகியுள்ளனர் . அதேபோன்று, கிளிநொச்சியினைச் சேர்ந்த மற்றொரு சிரேஸ்ட ஊடகவியலாளரான சு.பாஸ்கரன் மீதும் மாங்குளம் பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மற்றொரு சுயாதீன ஊடகவியலாளரான செ.ரவிசாந் தனது பணியிடம் சார்ந்து அச்சுறுத்தப்பட்டதாக அறிவித்துள்ளார்.
மற்றொரு சுயாதீன ஊடகவியலாளரான செ.ரவிசாந் தனது பணியிடம் சார்ந்து அச்சுறுத்தப்பட்டதாக அறிவித்துள்ளார்.
ஒருபுறம் ஊடகவியலாளர் தொழில்சார்ந்து பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். மறுபுறம் அவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களின் பின்னாலுள்ளவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படாத போக்கே காணப்படுகின்றது.
ஏற்கனவே, யுத்தகாலத்தில் வடகிழக்குத் தமிழர் தாயகத்தில் 39 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் கொல்லப்பட்டோ, காணாமலோ ஆக்கப்பட்டுள்ளனர். இன்றுவரை அவர்களிற்கு நீதியை வழங்க மாறி மாறி ஆட்சியிலுள்ளோர் தயாராகவில்லை. இந்நிலையில் ஊடக சுதந்திரம் திரும்பிவிட்டதாகக் காண்பிக்க அரசும் அதன் முகவர்களும் பாடுபடுகின்றனர்.
மீண்டும் தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களை யாழ்.ஊடக அமையம் மிக வன்மையாக கண்டிக்கின்றது.
இலங்கை அரசு வெறுமனே சொல்லிக்கொண்டிருக்கும் ஊடக சுதந்திரம் தொடர்ந்தும் பெயரளவிலேயே இருக்கப்போகின்றதா? என்ற கேள்வியையும் யாழ். ஊடக அமையம் முன்வைக்க விரும்புகின்றது என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment