கூட்டமைப்பின் ஒற்றுமை அற்ப விடயங்களுக்காகச் சீர்குலைந்து விடக்கூடாது என்பதற்காக இறுதிவரை நாம் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டிருக்கின்றோம். இந்த விட்டுக்கொடுப்புக்கள் எல்லாம் விரும்பி ஏற்றுக்கொண்டவைகளல்ல என ரெலோ கட்சியின் முக்கியஸ்தரும், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சித் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் ரெலோ சார்பில் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் நாம் போட்டியிடுகின்ற கடைசித் தேர்தலா? என்பதைத் தமிழரசுக் கட்சி தான் தீர்மானிக்க வேண்டும். இந்தத் தேர்தலுக்கான ஆரம்ப ஆயத்தங்கள் அனைத்துமே நல்ல அனுபவங்களைக் கற்றுத் தந்துள்ளன.
ஒற்றுமை, ஐக்கியம், கூட்டு என்ற வெறும் ஒற்றைச் சொல்லாடல்களுக்குள் நாம் தொடர்ந்தும் ஏமாற முடியாது. எமது கட்சியை அடைமானமும் வைக்கமுடியாது. கூட்டமைப்பின் தலைமை கொழும்பில் கூடி ஏகமனதாக எடுத்த தீர்மானங்களையும், உடன்பாடுகளையும் மாவட்டத் தலைமைகள் உதாசீனம் செய்தமையே ஆரம்பக் களேபரங்களுக்கு அடிப்படைக் காரணங்களாகும்.
கூட்டமைப்பில் சிலரது நடவடிக்கைகள் தனிப்பட்ட ரீதியில் சில விமர்சனங்களை உருவாக்கினாலும் அது கூட்டமைப்பின் ஆதரவுத்தளத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வராது.
இந்தத் தேர்தலானது கிராமிய, பிரதேச அபிவிருத்தியை மையமாகக் கொண்டுள்ளதால் ஐம்பது சதவீத வெற்றி என்பது வேட்பாளர்களிலேயே தங்கியுள்ளது. மிகுதி ஐம்பது வீதமான வெற்றியை நாம் ஏற்கனவே உங்களுக்குப் பெற்றுத்தந்துள்ளோம். வேட்பாளர் தெரிவில் தவறிழைத்ததால் கூட்டமைப்பு தோல்வியடைந்தது என்ற பழியை எமது வேட்பாளர்கள் எமக்கு பெற்றுக் கொடுக்கக்கூடாது என்றார்.
0 comments:
Post a Comment