//]]>

Friday, December 15, 2017

நல்லூரில் களைகட்டிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாட்டின் நிறைவு நாள் வைபவம்(Videos,Photos)


ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசை விழாவின் நிறைவு நாள் வைபவம் இன்று வெள்ளிக்கிழமை(15) முற்பகல்-10.45 மணி முதல் யாழ். நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் பிரதம விருந்தினராகவும்,   சைவமகாசபையின் பொதுச் செயலாளர் வைத்தியகலாநிதி ப. நந்தகுமார் சிறப்பு   விருந்தினராகவும் கலந்து கொண்டார்.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிறைவுநாள் நிகழ்வில்இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் சைவசமயத்தின் அடையாளமான  நந்திக் கொடியை ஏற்றி வைத்தார்.

விழாவில் இசையரங்கம், மட்டக்களப்பு காயத்திரிபீடத்தைச் சேர்ந்த சிவயோகச் செல்வர் சாம்பசிவ சிவாச்சாரியாரின் "நாவலர் கீதம்"  இசையும் கதையும் நிகழ்வு என்பன இடம்பெற்றது.  இதன் போது "சைவ வினாவிடை", "பாலபாடக் கட்டுரைகள்", "ஆறுமுகநாவலர் சரித்திரம்" உள்ளிட்ட நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன.

விழாவில்  சிறந்த சைவத்தமிழ்ப் பணிகளைப் பாராட்டி யாழ். பல்கலைக்கழகத்தின் வாழ்நாட் பேராசிரியர் சி. க.சிற்றம்பலம் நாவலர் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டதுடன்,  சைவவித்தியா விருத்திச் சங்கத்திற்கும் 'நாவலர்'  விருது வழங்கி வைக்கப்பட்டது. குறித்த விருதினை சைவவித்தியா விருத்திச் சங்கம் சார்பாகச் சங்கத்தின் செயலாளர் எஸ். செல்வமனோகரன் 'நாவலர்' விருதினைப் பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் வரலாற்று அறிவுப் போட்டியில் திறமையை வெளிக்காட்டிய மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த விழாவில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரன்,
சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன், கனடா சைவசித்தாந்த பீட இயக்குனர் லம்போதரன் உள்ளிட்ட ஆன்மீகப் பெரியோர்கள், அறநெறி மாணவர்கள், ஆசிரியர்கள் சைவத்தமிழ் ஆர்வலர்கள்  எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment