//]]>

Monday, January 29, 2018

152 ஆண்டுகளின் பின் வானில் அதிசய மாற்றம்:நீங்களும் பார்வையிடலாம்!


152 ஆண்டுகளுக்குப் பின்னர் நாளை மறுதினம் புதன்கிழமை(31) ஒரே நாளில் மூன்று அரிய சந்திர கிரகண நிகழ்வுகள் வானில் நிகழவுள்ளது. 

முழுச் சந்திர கிரகணத்துடன் கூடிய இரத்த நிலவு, சுப்பர் நிலவு, நீல நிலவு என்பனவே இவ்வாறு ஒரேதடவையில் தோன்றவுள்ளது.

இதுகுறித்து கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான அலகின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன கருத்து வெளியிடுகையில்,

“இந்த மூன்று அரிய சந்திர நிகழ்வுகளையும் ஒருங்கே நாளை மறுநாள் மாலை- 6.15 மணிக்குப் பின்னர் கிழக்குத் திசையில் காண முடியும்.1866ஆம் ஆண்டுக்குப் பின்னர், நிகழும் அரிய நிகழ்வு இதுவாகும்.

இந்த வேளையில் பூமிக்கு நெருக்கமாகச் சந்திரன் வருவதால் கடலலைகள் உயரமாக மெலேழும்.

இது போன்ற வானியல் நிகழ்வுகள் கடந்த காலத்தில் ஏற்பட்ட போது பூமி அதிர்ச்சிகளோ அல்லது  வேறு இயற்கை அனர்த்தங்களோ ஏற்படவில்லை. அன்றைய தினம் பூமி அதிர்ச்சி, ஆழிப்பேரலை, சூறாவளி ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுவது வெறும் வதந்திகளேயாகும்.

முழு அளவிலான சந்திர கிரகணம் இரத்த நி்லவு என அழைக்கப்படுகின்றது. ஏனெனில், சந்திரன் பூமியின் நிழலில் முழுமையாக மறைக்கப்படும் போது செந்நிறமாகக் காட்சியளிக்கும். சந்திரன் பூமிக்கு மிக நெருக்கமாக வரும் போது அதனைச் சுப்பர் நிலவு என்பார்கள்.

ஒரே மாதத்தில் தோன்றும் இரண்டு முழு நிலவுகளில் இரண்டாவதாக வரும் முழு நிலவு நீல நிலவு என அழைக்கப்படும். ஆனால், இது நீல நிறத்தில் காட்சியளிக்காது. இந்த மூன்று அரிய நிகழ்வுகளும் ஒரே நாளில் எதிர்வரும்- 31ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இலங்கையில் முழுச் சந்திர கிரகணத்தை மாலை 6.15 மணியிலிருந்து பார்வையிட முடியும். ஆனால், இலங்கை நேரப்படி பிற்பகல்- 4.21 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகி இரவு- 9.38 மணியளவில் நிறைவடையும் என்றார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment