யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், முற்போக்குத் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளருமான சு. விஜயகாந் உள்ளிட்ட நால்வர் மீது முன்வைக்கப்பட்ட 119 பவுண் திருட்டு நகைகளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் அவற்றை அடகு வைக்க முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் யாழ். நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த- 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வங்கியொன்றில் அடகு வைப்பதற்கு சு. விஜயகாந் சென்றிருந்தார். இதன் போது அந்த வங்கியில் கடமையாற்றும் அலுவலகரின் திருட்டுப் போன நகை விஜயகாந்திடம் காணப்பட்டமை கண்டறியப்பட்டது. இது தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ். பொலிஸார், விஜயகாந்த் உள்ளிட்ட நால்வரைக் கைது செய்தனர். யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் நால்வரும் பின்னர் ஆள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
விஜயகாந் உள்ளிட்ட நால்வர் மீதும் 119 பவுண் நகைகளைத் திருடியமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கோப்பாய்ப் பொலிஸாரால் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்புக்காகத் திகதியிடப்பட்டது.
இந்நிலையில் சந்தேகநபர்கள் நால்வர் மீதான திருட்டுக் குற்றச்சாட்டு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை. எனினும், சந்தேகநபர்கள் திருட்டு நகைகளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் அடகு வைக்க முற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. நான்கு குற்றவாளிகளுக்குமான தண்டனைத் தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி வழங்கப்படுமென யாழ். நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் மன்றில் தெரிவித்தார்.
விஜயகாந்தின் மேற்படி செயற்பாடு காரணமாக அவரைத் தமது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஈ.பி.டி.பி கட்சி நீக்கியது. இதன் காரணமாக அவர் முற்போக்குத் தமிழ்த் தேசியக் கட்சியை ஆரம்பித்தார். எனினும், எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் புதிய கூட்டணியுடன் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் அவரது கட்சி போட்டியிட முடிவெடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment