மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை வெளியிடப்பட்டவுடன் நாணயச் சபையுடன் கலந்துரையாடி அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மத்திய வங்கி ஆளுநருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். நேற்று(05) கொழும்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த ஆலோசனையை விடுத்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலின் போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, முழுமையான அறிக்கை வெளியிடப்பட்டதும் அது குறித்து நாணயச் சபையுடன் கலந்துரையாடி அந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கி ஆளுநருக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை, ஆணைக்குழுவால் பரிந்துரை செய்யப்பட்ட உள்ளகக் கணக்கறிக்கைகளை ஆய்வுசெய்யும் பொருட்டுப் பொருத்தமான உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நிறுவனமொன்றை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் இந்தக் கலந்துரையாடலின் போது குறிப்பிட்டுள்ளார்.
2008 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டு வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பாகச் சரியான விசாரணைகளை நடாத்தி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளமையால் மத்திய வங்கியின் அனைத்து ஆவணங்களும் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் இந்தக் கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்த உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள மத்திய வங்கி ஆளுநர், திறைசேரிச் செயலாளர் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஆகியோரடங்கிய குழு நியமிக்கப்பட்டு இதற்கான பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment