பிரசித்தி பெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத்தின் குபேரவாசல் இராஜகோபுர கும்பாபிஷேகம் நாளை ஞாயிற்றுக்கிழமை(28) காலை வெகுசிறப்பாக இடம்பெறவுள்ளது. அதனை முன்னிட்டு எமது செய்திச் சேவைக்கு இன்று(27) வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசம் போற்றும் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி குபேர வாசல் இராஜகோபுர கும்பாபிஷேகம் நாளைய தினம் காலை-07.30 மணி முதல் காலை-08 மணி வரையுள்ள சுபவேளையில் இடம்பெறவுள்ளது.
எங்கள் தேவஸ்தானத்தில் வடக்கு வாசல் இராஜகோபுரம் மூன்றாவது கோபுரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கலைக் கோபுரமாகிய இராஜகோபுரம் 1980 ஆம் ஆண்டிலும், அதனைத் தொடர்ந்து தென்திசை நோக்கிய இராஜகோபுரம் 2016 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தற்போது ஏ விளம்பி வருடத்தில் 2017 ஆம் ஆண்டு ஆனி மாத உத்தர நட்சத்திரத்தில் குபேரவாசல் இராஜகோபுரத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் நாளைய தினம் இராஜகோபுர கும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
இந்தியாவின் சிதம்பரம் பெரிய குத்தகைக்கரை கலியப்பெருமாள் புருசோத்தமன் தலைமையிலான நூற்றுக்கணக்கான குழுவினர் கடந்த ஆறு மாத காலமாக ஆலயத்திலேயே தங்கியிருந்து முழுநேரப் பணியாகப் புதிய இராஜகோபுரத்தை நிர்மாணித்து முடித்திருக்கிறார்கள். அடியவர்களின் நிதிப் பங்களிப்பில் இராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆலய தென்திசைக் கோபுர வேலைகள் நிறைவுபெற்றதும் அடியவர்கள் வடதிசைக் கோபுரத்தையும் நிர்மாணிக்க வேண்டுமென ஆவல் கொண்டார்கள். அந்த வகையில் தான் இந்த இராஜகோபுரம் நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகி நிறைவு பெற்றுள்ளன.
இந்தக் குபேர வாசல் இராஜகோபுரத்தில் அம்பாளின் மகத்துவங்கள், சைவசமயத்துப் பெருங்கடவுளாகிய சிவபெருமான் தொடக்கம் விநாயகப் பெருமான், முருகப் பெருமானின் திருவருட் காட்சிகளும், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்கும், எங்கள் தேவஸ்தானத்துக்குமிடையிலான தொடர்புக்கமைய குதிரை முகம் நீங்கிய மாருதப்பூரவீகவல்லியின் தோற்றம், குதிரை முகம் மாறிய வரலாறு, நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு கீரிமுகத்துடன் நகுலகிரி முனிவர் வருகை தந்த காட்சி என்பன கோபுரத்தில் செதுக்கப்பட்டுள்ளது.
மேலும் எங்கள் தேவஸ்தானத்தில் அபிராமி அந்தாதி பாடிய அபிராமிப்பட்டர் விழா வருடாவருடம் தை அமாவாசை நாளில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அபிராமிப் பட்டருடைய சரித்திரமும் புதிய இராஜகோபுரத்தில் செதுக்கப்பட்டுள்ளது. புதிய இராஜகோபுரத்தை நோக்கிய சிறிய பாதையும் நாளைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளது. ஆலயத்தின் வடதிசை வாழ் மக்கள் அந்த வழியூடாக ஆலயத்திற்கு வருகை தர முடியும்.
இதனைவிட நாளைய தினம் ஸ்ரீ மேரு சக்கரப் பிரதிஷ்டை கும்பாபிஷேகமும் இடம்பெறவுள்ளது. இந்தியாவிலிருந்து ஸ்ரீ மஹாமேரு சக்கரம் உருவாக்கப்பட்டு இங்கே கொண்டு வந்து சேர்க்கப்பட்டு ஆலயத்தின் வடதிசையில் அதற்கெனத் தனியானதொரு ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு அந்தக் கோவிலில் மகாமேரு சக்கரம் பிரதிஸ்டை செய்யப்படவுள்ளது. இராஜகோபுர கும்பாபிஷேகம் நிறைவு பெற்றதும் ஸ்ரீசக்கரத்திற்குரிய கும்பாபிஷேகமும் இடம்பெறும். அனைவரும் நாளைய புனிதநாளில் ஆலயத்திற்கு வருகை தந்து அம்பாளின் திருவருளைப் பெற்றுய்வீர்களாக! என்றார்.
(நேர்கண்டவர்:- செல்வநாயகம் ரவிசாந்-)
குபேரவாசல் இராஜகோபுரம்
0 comments:
Post a Comment