//]]>

Sunday, January 28, 2018

நாளைக்கே சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்கத் தயார்!: ஜனாதிபதி அதிரடி


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 96 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தம்முடன் இணைந்தால்    நாளைக்கே கூட சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்கத் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இரத்தினபுரியில் நேற்று(27) நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைத்தால் தாமும் இணைந்து கொள்ளத் தயார் எனப் புதிய கூட்டணியொன்றை  அமைத்தவர்கள்  கூறியிருக்கிறார்கள்.

நான் அவர்களுக்குக் கூறுகிறேன், 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றாக வந்து என்னுடன் நில்லுங்கள். நாளைக்கே நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கிறேன்.

நாளை காலையே எனது இல்லத்துக்கு வாருங்கள். 96 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எவ்வாறு ஓர் அரசாங்கத்தை அமைப்பது என உங்களுக்குக் காண்பிக்கிறேன்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment