பின்தங்கிய நிலையிலிருக்கும் வடமாகாணத்தில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானத்தை அமைப்பதன் மூலம் பல விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
யாழ். மண்டைதீவில் சர்வதேச தரத்திலான புதிய விளையாட்டு மைதானமொன்றினை நிர்மாணிப்பது தொடர்பில் ஆராய்வதற்காகப் பாராளுமன்ற உப சபாநாயகரும், இலங்கையின் துடுபந்தாட்டச் சபையின் தலைவருமான திலங்க சுமதிபால தலைமையிலான விசேட குழுவினர் இன்று சனிக்கிழமை (27) கொழும்பிலிருந்து யாழ் வருகை தந்துள்ளனர்.
குறித்த குழுவினர் மண்டைதீவுப் பகுதிக்கு நேரடி விஜயம் செய்து ஆய்வுகள் மேற்கொண்டனர். இந்த ஆய்வுக் குழுவில் ஒருவராக வடக்கு ஆளுநரும் கலந்து கொண்டிருந்தார்.
இதன் போது கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தென்னிலங்கையில் மட்டுமல்ல வட மாகாணத்திலும் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்காகச் சர்வதேச விளையாட்டு மைதானமொன்றினை அமைப்பதற்கு திலங்க சுமதிபால பாரிய நிதியினை ஒதுக்கீடு செய்தமைக்காக நான் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
மேலும், இங்கு சர்வதேச தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம் நிர்மாணிக்கப்படுவதன் மூலம் சர்வதேச நாடுகளின் விளையாட்டு வீரர்களுடன் எமது வீரர்கள் யாழ். மண்டைதீவு விளையாட்டு மைதானத்தில் விளையாடக் கூடிய சந்தர்ப்பங்கள் எழுமென எண்ணுகின்றேன்.
அனைத்துச் சமூகங்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் வடமாகாணத்தின் மண்டைதீவில் இந்த மைதானம் அமைக்கப்படவுள்ளது.
இந்த ஆண்டில் மைதானம் அமைக்கும் பணிகளை அரசாங்கம் முன்னெடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment