தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்கள் கட்டப்பட்ட நிலையில் தான் அன்றும் இருந்தார்கள்... இன்றுமிருக்கிறார்கள்... என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும்,வேட்பாளர் அறிமுகமும் யாழ். கந்தர்மடத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை(20) இடம்பெற்ற போது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கடந்த- 2009 ஆம் ஆண்டு மே மாதம்-18 ஆம் திகதி வரை முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிப்போரில் எமது உறவுகள் பலர் உயிரிழந்தனர். அப்போது, 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வட– கிழக்கில் காணப்பட்டனர். எனினும், அந்த மக்களுக்காக தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்தார்களா? என எமது மக்கள் சிந்திக்கவேண்டும்.
அவர்களில் சிலர் இன்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவுள்ளனர். சிலர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தனர். இவர்களனைவரும் சேர்ந்தே தற்போது உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்கள் இன்று பல்வேறு கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
அன்று மக்களுக்காகக் குரல் கொடுக்க முடியாதவர்களை இன்று நாம் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment