//]]>

Thursday, January 18, 2018

யாழ். ஊடக அமையத்தில் கண்கலங்கிய பெண் வேட்பாளர்(Video)

முள்ளிவாய்க்கால் பகுதியை இறந்த ஆத்மாக்களின் வழிபாட்டிடமாகத் தான் நாம் பயன்படுத்த வேண்டும். இவ்வாறான பகுதியில் அரசியல் கதைக்கக் கூடாது என்பது தான் என் கொள்கையாகவுள்ளது. இந்நிலையிலேயே முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவுகூரல் நிகழ்வில் அரசியல் பேச வேண்டாமென வலியுறுத்திக் கூறியிருந்தேன் .நான் அவ்வாறு கூறிய பின்னர் பல சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல்களையும், துன்புறுத்தல்களையும் சந்தித்துள்ளேன் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகரசபை பெண் வேட்பாளர் திருமதி- லதா கோடீஸ்வரன் கண்கலங்கியவாறு தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று(18) நண்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கடந்த வருடம் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவு கூரல் நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உரையாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அதனை நீங்கள் குழப்பியதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இது குறித்து உங்களுக்கு ஆதரவான கருத்துக்களும், எதிரான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நீங்கள் கூற விரும்புவது என்ன? என ஊடகவியலாளரொருவர் வினாவினார். இதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நான் கடந்த கால யுத்தம் காரணமாகப் பாலூட்டி வளர்த்த என் பிள்ளையொன்றைப் பறிகொடுத்துள்ளேன். என்னுடைய சகோதரர்களை, நண்பர்களைப் பறிகொடுத்துள்ளேன்.

முள்ளிவாய்க்கால் மரண ஓலங்கள் நிறைந்ததொரு பகுதி. அந்தப் பகுதியில் கிறிஸ்தவ மதம், சைவ மதம் ஆகியவற்றைப் பின்பற்றிய மக்கள் தத்தமது மதங்களின் மரியாதைகளுக்கமைய இறக்கவில்லை.செல்லடிபட்டு பெரும் துன்பத்தின் மத்தியில் தான் அனைத்து மக்களும் இறந்திருக்கின்றனர் எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

('தமிழின் தோழன்')


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment