யாழிலிருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தைத் தடுத்து நிறுத்திய தனியார் பஸ் நடத்துனர்கள் பேருந்தின் காப்பாளர்களைக் கடுமையாக எச்சரித்த சம்பவம் மாங்குளத்திற்கும், கனகராயன் குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று முன்தினம்(15) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன்தினம்(15) பிற்பகல்-12.30 மணியளவில் யாழ். சாலையிலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து தனது வழமையான சேவையை ஆரம்பித்து வவுனியா நோக்கி மேற்கொண்டிருந்தது. இதன் போது மாங்குளத்திற்கும், கனகராயன் குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் யாழிலிருந்து வவுனியா நோக்கிச் சேவையாற்றும் தனியார் பஸ் ஒன்று மேற்படி பேருந்தைக் கடந்து சென்றது.
இதன் போது குறித்த தனியார் பஸ் நடத்துனர்கள் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தை இடைநிறுத்தி சாரதி காப்பாளர்களை நோக்கிக் கைகளாலும், வார்த்தைகளாலும் கடுமையாக எச்சரித்துச் சென்றுள்ளனர்.
குறித்த தனியார் பஸ் சாரதி கிளிநொச்சியிலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையின் பெருந்துடன் போட்டியிட்டு பஸ்ஸைச் செலுத்தியதாகவும், தம்மை மேற்படி போக்குவரத்துச் சபை பஸ் முந்திச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
('தமிழின் தோழன்')
0 comments:
Post a Comment