//]]>

Thursday, February 15, 2018

நல்லிணக்கத்திற்கு எவ்வாறு வித்திடலாம்?:வடக்கு முதல்வர் கூறுவது இதுதான்!

நல்லிணக்கத்திற்குப் புரிந்துணர்வு ஏற்படுவது முக்கியம். நாம் மேன்மையானவர்கள். தமிழர்கள் கீழானவர்கள், கள்ளத்தோணிகள் என்ற எண்ணம் சிங்களவர்கள் மனதிலிருக்கும் வரை நல்லிணக்கத்திற்கு இடமில்லை. கிணற்றுக்குள் விழுந்திருக்கும் ஒருவனுக்கும், கிணற்றுக்கு வெளியிலிருக்கும் ஒருவனுக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்பட முடியாது. கிணற்றில் விழுந்திருப்பவனை மேலே எழுப்பி நிலத்தில் நிலைபெறச் செய்தால் தான்  இருவரும் நல்லிணக்கத்திற்கு வித்திடலாம் என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்குமாகாண முதலமைச்சரால் வழங்கப்பட்டு வரும் வாரமொரு கேள்வி பதில் பகுதியில் இவ்வாரம் நாட்டின் நல்லிணக்கம் தொடர்பில் வினாவப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆகவே, நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் ஒடுக்கப்பட்டிருக்கும் நாங்கள் விடுதலை அடைந்திருக்க வேண்டும். எம்மைக் கிணற்றுக்குள் வைத்துக்கொண்டே புசிக்கச் சில உணவு வகைளைக் கொடுத்துவிட்டுத் தாம் நினைத்தது போன்று நல்லிணக்கம் ஏற்பட்டதாக உலகிற்கு அறிவிப்பார்கள். தற்பொழுது நல்லிணக்கம் என்ற பெயரில் நடைபெறுவது வெறும் கண்துடைப்பே. உண்மையான நல்லிணக்கத்திற்கு நாங்கள் வித்திடவில்லை.

நல்லிணக்கம் வேண்டுமென்றால் கைகொடுத்து எம்மை எழுப்பவேண்டியவர்கள் அரசாங்கத்தினரே. இராணுவத்தை எம்மிடையே வைத்துக்கொண்டு, மத்தியின் அதிகாரத்தை இங்கு பிரயோகித்துக் கொண்டு, எங்கள் பொருளாதார விருத்தியில் உள்ளிடும் உரிமையைத் தம்கைவசம் வைத்துக்கொண்டு அரசாங்கம் நல்லிணக்கம் பேசுகிறது.  கிணற்றினுள்ளே இருப்பவருடன் கிணற்றுக்கு வெளியில் இருப்பவர் சமாதானம் பேசுகின்றார். அவர்கள் நல்லிணக்கத்திற்கான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்றே கூறுவேன்.

தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களுக்கு ஒரு அரசியல் ரீதியான தீர்வைக் கொடுத்த பின்னரே உண்மைக்கும், சமரசத்திற்குமான ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இங்கு விழுந்தவர்களை விழுந்திருக்க வைத்துக்கொண்டே வியப்பான ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் விளைகின்றது. அது பயனளிக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

(தமிழின் தோழன்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment