//]]>

Wednesday, February 21, 2018

ஊர்காவற்துறை அதிபருக்கு இளஞ்செழியன் வழங்கியுள்ள கடும் தண்டனை விபரம் இதோ....

யாழ். ஊர்காவற்துறை நாரந்தனைப் பகுதியில் ஒன்பது வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபரொருவருக்குப் பத்து  ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இன்று புதன்கிழமை(21) உத்தரவிட்டுள்ளார். 

யாழ். ஊர்காவற்துறை நாரந்தனைப் பகுதியிலுள்ள ஆரம்பப் பாடசலையொன்றில் கடந்த- 2009ஆம் ஆண்டு நவம்பர் மாத காலப்பகுதியில் தரம் -4இல் கல்வி கற்ற ஒன்பது வயது மாணவியொருவர் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டார் என்று ஊர்காவற்றுறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. பாடசாலை அதிபரே தன்னை வன்புணர்வுக்குட்படுத்தினார் என மாணவி தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.



இதனடிப்படையில் கைது செய்யப்பட்ட மேற்படி பாடசாலையின் அதிபர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தால்  பிணையில் விடுவிக்கப்பட்டார். எனினும் பாதிக்கப்பட்ட மாணவி நீதிமன்றின் உத்தரவின் பேரில் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.இந்த நிலையில் சந்தேகநபருக்கு எதிராக சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டை முன்வைத்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.


இதனடிப்படையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன. வழக்குத் தொடுநர் சார்பில் அரச சட்டத்தரணி நாகரட்ணம் நிசாந்த் வழக்கை நெறிப்படுத்த எதிரி சார்பில் சட்டத்தரணி பி.தவபாலன்  முன்னிலையாகினர். இந்த நிலையில் வழக்கு தீர்ப்புக்காக இன்றைய தினம் திகதியிடப்பட்டது. 

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சி முன்வைக்கப்பட்டது. மேலும், சிறுமியின் தாயார் மற்றும் அவரது நண்பியின் சாட்சிகளும் சிறுமியால் கூறப்பட்ட கதையாக மன்றில் முன்வைக்கப்பட்டன. 



எனினும், சிறுமி நடத்தை கெட்டவள் என எதிரி தரப்பால் மன்றில் புதுக்கதை சோடிக்கப்பட்டது. ஒன்பது வயதுச் சிறுமி இரண்டு இளைஞர்களுடன் பாலியல் தொடர்பை வைத்திருந்தாள் என அவளின் தாயார் கூறியதாக எதிரியும், அவரது மனைவியும் மன்றில் சாட்சியமளித்தனர். இந்த விடயம் தற்போது தான் எதிரி தரப்பால் வெளிப்படுத்தப்படும் கதையாகும். எனினும், எதிரி தரப்பால் மன்றில் முன்நிறுத்தப்பட்ட ஆசிரியர்கள் மாணவியின் நடத்தைக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

எனவே, சிறுமியால் கூறப்பட்ட சாட்சியத்தையும் மருத்துவ அறிக்கையையும் வைத்து இந்த மன்று எதிரியைக் குற்றவாளியாக அறிவிக்கின்றது என நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். 

குற்றவாளி பாடசாலை அதிபர். அவரின் கட்டுப்பாட்டுக்குள் தான் பாடசாலை உள்ளது. அவரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் தான் மாணவி உள்ளார்.

அரச அலுவலர் ஒருவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்களையோ சிறுவர்களையோ பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்துவது கடுமையான குற்றமாகும். அவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்குவது கட்டாயமானதாகும் என நீதவான் தனது தீர்ப்பை அறிவித்தார்.



குற்றவாளிக்குப் பத்து ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குற்றவாளி பத்து இலட்சம் ரூபா இழப்பீட்டை வழங்கவேண்டும். அதனை வழங்கத் தவறின் இரண்டு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும். தண்டமாக ஐந்தாயிரம் ரூபா செலுத்தவேண்டும். தவறின் ஒரு மாதகால கடூழியச் சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும் எனவும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தனது தீர்ப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

(தமிழின் தோழன்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment