//]]>

Monday, February 19, 2018

தென்னிலங்கை அரசியல் சூழலை கூட்டமைப்பால் மாத்திரம் எதிர்கொள்ள முடியாது: சிவாஜிலிங்கம்(Video)

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தென்னிலங்கையில் மும்முனைப் போட்டி நிலவியது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியதேசியக் கட்சி, முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக் ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜமுன்னணி எனும் வகையில் இந்த மும்முனைப் போட்டி அமைந்திருந்தது. இந்த மும்முனைப் போட்டிகளில் இனவாதம் முன்னிலைக்கு வருமென்பதை நாம் முன்னரே அறிந்திருந்தோம். ஆனால், இனவாதம் மிக அதிகமாகவே முன்னிலைக்கு வந்து விட்டது. உள்ளுராட்சிசபைத் தேர்தலுக்குப் பின்னர் தென்னிலங்கையில் உருவாகியுள்ள அரசியல் சூழலை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள மூன்று அங்கத்துவக் கட்சிகளால் மாத்திரம் எதிர்கொள்ள முடியாது எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
யாழ். முகாமையாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் "உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் ஒரு கண்ணோடடம்" எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நேற்றுப் பிற்பகல் நல்லூர் யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்மக்களுடைய உரிமைகளையும், அபிவிருத்தியையும் தாராளமாகச் சமாந்தரமாக முன்னெடுக்க முடியும். தமிழ்மக்கள் எதிர்நோக்குகிற பல பிரச்சினைகள் காணப்படும் நிலையில் நீங்கள் ஏன் உரிமையை முன்னிலைப்படுத்துகிறீர்கள்? என ஊடகவியலாளரொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் என்னிடம் வினாவினார். இனப் பிரச்சினை காரணமாக இரண்டு இலட்சம் தமிழ், சிங்களம், முஸ்லீம் உயிர்கள் பறிபோயுள்ளது.  இந்நிலையில் தேசிய இனப் பிரச்சினை முதலாவது பிரச்சினையாகவுள்ளது என நான் பதிலளித்தேன்.

எங்களுடைய தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பொது உடன்பாட்டிற்கு வர வேண்டியது அவசியம். சிலரும், இது உங்களுக்கு ஏற்பட்டுள்ள சுடலை ஞானமா? கசப்பான தேர்தல் முடிவுகள் வெளிவந்தமையால் தான் இவ்வாறான முடிவுக்கு வந்துள்ளீர்களா? எனக் கேட்கலாம். ஆனால், தேர்தல் பிரசாரத்தின் போதே நான் இவ்விடயம் தொடர்பில் தெளிவாகக் குறிப்பிட்டுளேன்.

தமிழர் தரப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு அதிக அங்கீகாரம் கிடைத்துள்ளதாயினும் தமிழ்த்தேசிய சக்திகள் வெளியில் இருக்கிறார்கள் என்பதனை நாங்கள் மறந்துவிடக் கூடாது. அவர்களையும் உள்வாங்கிப் பலஸ்தீனம் போன்று ஒரு தேசிய மன்றத்தை அமைத்து அந்த மன்றத்தில் முக்கிய கட்சிகளுக்கு வீட்டோவை வழங்கி கலந்து பேசி விரிவான ஏற்பாடுகள் இனியாவது செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

(தமிழின் தோழன்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment