இன்றும் எங்களிடத்தே அந்த வீரம் செறிந்த இரத்தமே ஓடிக் கொண்டிருக்கிறது. எங்களுடைய ஜனநாயகத் தலைவர்களுடன் அவர்களுக்கு மேலதிகமாக நாங்கள் பயணிப்பதெல்லாம் எங்களுக்கு உலக அரங்கில் முகவரி தேடித் தந்ததுடன் முப்படைகள் மூலம் எங்கள் பிரதேசத்தில் மிகச் சிறந்த நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்தி உலகமே வியக்கும் வகையில் ஆயுதப் போராட்டத்தை நடாத்திக் காட்டியவர் தான் எங்களுடைய அதிமேதகு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் வலி.தெற்குப் பிரதேச சபையில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரும், வலி.தெற்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
வலிகாமம் தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்றுப் புதன்கிழமை(07) பிற்பகல் முதல் இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம் சுன்னாகம் நகரை அண்டிய பகுதியில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரபாகரனின் பெயரைக் கேட்டதும் அங்கு கூடியிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் பிரதேசப் பொதுமக்கள் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எங்களுடனிருந்து எங்களுடைய இன்ப துன்பங்கள், எங்களுடைய பிரச்சினைகளை நன்கு ஆராய்ந்ததுடன், எங்கள் இனத்துக்குத் துன்பம் இழைக்கப்பட்ட போது நாங்கள் பொருளாதார ரீதியாகத் திட்டமிட்டுப் பின்னடிக்கப்பட்ட போது நாங்கள் எங்கள் உயிரைக் கொடுத்துப் போராடுமளவுக்கு ஆயுதம் தூக்கிப் போராடிய சமூகத்தில் பிறந்தவர்கள்.
நாங்கள் ஆயுத ரீதியில் எவ்வளவு பலமுடையவர்களாகவுள்ளோமோ அதேபோல ஜனநாயக ரீதியிலும் நாங்கள் பலமுள்ள அமைப்பாக இருக்க வேண்டுமென்பதற்காக பிரபாகரனால் ஒருங்கிணைக்கப்பட்டது தான் இந்தத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. அன்றிலிருந்து இன்று வரை வீட்டுச் சின்னம் வென்று கொண்டேயிருக்கின்றது. எதிர்வரும்-10 ஆம் திகதியும் நாங்களே வெல்வோம் எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment