//]]>

Monday, March 5, 2018

தமிழ்த்தேசியமக்கள் முன்னணிக்கு தைரியமிருந்தால்....!: சீ.வீ.கே பகிரங்க சவால்(Video)

யாழ்.மாநகர சபையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆட்சியமைப்பதற்குப் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பத்துப் பேர் ஆதரவு என்றால் அவர்கள் வெளிப்படையாக வாக்களிக்கட்டும். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் வேறு எவருடனோ பேரம் பேசியிருப்பதாகவே தெரிகிறது.இந்நிலையில் இரசிகசிய வாக்கெடுப்பின் போது அவர்கள் வழங்கும் ஆதரவை நாங்கள் வழங்கும் ஆதரவெனச் சொல்லித் திரிவதற்கே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இரகசிய வாக்கெடுப்பைக் கோருகின்றதா? என எண்ண வேண்டியுள்ளது. அவர்களின் எண்ணம் ஒருபோதும் சரிவராது. தமிழ்த்தேசியமக்கள் முன்னணிக்குத் தைரியமிருந்தால் வெளிப்படையான வாக்கெடுப்பிற்கு வரட்டும் என வடக்கு மாகாண அவைத் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான சீ.வீ.கே. சிவஞானம் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

'Jaffna Vision' செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இரகசிய வாக்கெடுப்புக் கோருகின்றார்கள். கூட்டத்தில் பிரசன்னமாகியிருக்கும் உறுப்பினர்கள் திறந்த, வெளிப்படையான வாக்கெடுப்பா? அல்லது இரகசிய வாக்கெடுப்பா? எனத் தீர்மானிக்கும் படி தலைமை தாங்கும் அதிகாரி கோருவார். அவ்வாறான நிலையில் எங்களுடைய உறுப்பினர்கள் அல்லது வேறு யாராவது இரகசிய வாக்கெடுப்புக் கோரினால் எங்களுடைய உறுப்பினர்கள் வெளிப்படையான வாக்கெடுப்பையே வலியுறுத்தி நிற்பார்கள். அந்த நிலையில் தலைமை தாங்கும் அதிகாரி அந்த விடயத்தில் மட்டும் அங்கத்தவர்களின் முடிவை வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிப்பார். அதன் பின்னர் நடப்பவையெல்லாம் நடக்கட்டும்.

வெளிப்படையான வாக்கெடுப்பில் எங்களுடைய முடிவுகளுக்கு மாறாக யாராவது செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் உறுப்பினர்கள் அச்சப்படுகிறார்கள் எனவும் சொல்லப்படுகின்றது.

ஆனால், எங்களைப் பொறுத்தவரை வாக்கெடுப்பு வெளிப்படையானதாக அமைய வேண்டும். எங்களுடைய கட்சி ஒரு கட்டுப்பாடுள்ள கட்சி.  எனவே, இந்தப் பொதுவான தீர்மானத்திற்கு எதிராக மாறாக எந்தவொரு உறுப்பினராயினும் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது கட்சியின் உரிமை.  ஆகவே, இதனைப் பயமுறுத்தல் என்றோ அல்லது அச்சுறுத்தல் என்றோ எடுத்துக் கொள்ளக் கூடாது.

அதனை விடுத்து மனச்சாட்சியின் படி அவர்கள் செயற்படுவதாயின் கட்சிக்கு வரக் கூடாது... தேர்தல் கேட்கக் கூடாது. எனவே, வாக்கெடுப்பு நடாத்தப்படும் போது எங்கள் கட்சியால் பிரேரிக்கப்பட்டவருக்கு வாக்களிக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செயற்படத் தவறினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.

எனவே, கட்டுப்பாட்டை மீறினால் நடவடிக்கை எடுப்பார்கள். அந்தப் பயத்தில் தான் வாக்களிக்காமல் விடுவார்கள் என்று சொல்வதெல்லாம் தவறானது.

கூட்டமைப்பின் பத்து உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதரவு எனில் அந்தப் பத்து உறுப்பினர்களினதும் பெயர்களைச் சொல்லுவதற்கு ஏன் பின்னிற்கிறார்கள்? ஏனெனில், அவர்கள் கூறும் கதை வெறும் கற்பனாவாதம்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கரணம் அடிக்கும் கூட்டமல்ல எனவும் விசேட செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(நேர்காணல்:- எஸ்.ரவி-)


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment