எதிர்வரும்-26 ஆம் திகதி திங்கட்கிழமை யாழில் புதிய கட்சியொன்று உதயமாகவுள்ளது.
கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலய முன்றலில்- 26 ஆம் திகதி பிற்பகல்-05.30 மணியளவில் அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி ஆரின் நினைவு நாள் இறுதி நிகழ்வில் அவரது நினைவாக 'தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி' எனும் பெயரில் புதிதாகக் கட்சி உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளதாக அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையின் தலைவர் பொன்மதி முகராஜா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை பிற்பகல்-01-30 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மதத் தலைவர்களினதும், ஆலயக் குருமார்களினதும் ஆசியுடன் எமது கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் போது கட்சியின் தலைவர், செயலாளர் உட்படக் கட்சியின் சகல அங்கத்தவர்களுக்குமான தெரிவு இடம்பெறவுள்ளது.
வட-கிழக்கில் தமிழ்மக்கள் எதிர்நோக்குகின்ற துன்பங்களை உலகத்திற்கு வெளிச்சமிட்டுக் காட்டுவதுடன் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான சரியான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தொடர்ச்சியான அழுத்தத்தைக் கொடுக்கும் நோக்குடனும் இந்தக் கட்சி ஆரம்பிக்கப்படுகிறது.
எமது அரசியல் பயணத்திற்கு வெளிநாடுகளிலுள்ள பல புலம்பெயர் மக்களும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். எமது கட்சியில் இணைய விரும்பும் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நல்லாட்சி அரசாங்கம் எமது மக்களுக்கு நன்மை செய்யும் என எதிர்பார்த்த போதும் தமிழர்கள் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. 2016 ஆம் ஆண்டுக்குள் தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவோம் என மார்தட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களும் இன்று மெளனித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறான காலகட்டத்தில் எமது மக்களை வழிநடாத்தப் புதிய தலைமையொன்று தேவை. நாம் எமது மக்களுக்கான அரசியல் தீர்வையும், ஏனைய உரிமைகளையும் தார்மீக வழியில் நின்று பெற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளோம்.
எதிர்வரும்-27 ஆம் திகதி காலை நான் இந்தியாவிற்குப் பயணமாகவிருக்கின்றேன். இந்தப் பயணத்தின் போது தற்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்ச் செல்வம், சசிகலா உள்ளிட்டோரைச் சந்தித்துத் தமிழர்களது தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாணக் கிளைத் தலைவரும், எம்.ஜி.ஆரின் தீவிர இரசிகருமான செல்லையா விஜயரட்ணம் கருத்துத் தெரிவிக்கையில்,
நாங்கள் புதிய கட்சியை ஆரம்பிப்பதன் நோக்கம் எமது மக்களுக்கான சரியான சேவை சென்றடையாமையே ஆகும். ஒரு மாகாண சபை உறுப்பினர் தனது தம்பிக்கு அமைச்சுப் பதவி வழங்குமாறு மாகாண சபையில் முரண்பட்டுள்ளார். மக்களைப் பற்றி இவ்வாறானவர்கள் சிந்திக்கத் தவறுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.
எமது கட்சி அனைவரையும் ஒன்று திரட்டி, மத பேதம், ஜாதி பேதம் எதுவுமின்றிச் செயற்படும். மக்கள் தான் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தான் மக்கள் எனும் நோக்கில் தான் நாங்கள் செயற்படுவோம்.
நாங்கள் ஐக்கியமாகச் செயற்பட வேண்டும். ஐக்கியம் என்று சொல்லிக் கொண்டு அண்ணன்-தம்பி சண்டை இடம்பெறக் கூடாது. மூத்த உறுப்பினர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும். வந்தோரை வரவேற்க நாங்கள் காத்திருக்கிறோம். யார் வந்தாலும் கட்சிக்குள் சேர்த்துக் கொள்ள நாங்கள் தயாராகவிருக்கிறோம்.
ஆனால், எமது கட்சியுடன் இணைந்து கொள்ள விரும்புவர்கள் சாத்வீகக் கொள்கையுடையவர்களாகத் தானிருக்க வேண்டும். ஆயுதப் போராட்ட சிந்தனையையே அவர்களிடம் இருக்கக் கூடாது என்றார்.
0 comments:
Post a Comment