வடக்கில் செயற்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 11 பேர் இன்று, கொழும்பு மேலதிக நீதிவான் அருணி ஆட்டிக்கலவினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேக நபர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளைச் சுமத்தப் போவதில்லை என்று பயங்கரவாத தடுப்புப் பிரிவினால், நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
அதேவேளை, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய, பணச்சலவை சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்றும் நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, 11 சந்தேக நபர்களையும், ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு பேரின் பிணையில் செல்வதற்கு நீதிவான் அனுமதி அளித்தார்.
சந்தேகநபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தடை விதித்த நீதிவான், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவில் முன்னிலையாக வேண்டும் என்றும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கைதான அலெக்ஸ் உட்பட நால்வர் அண்மையில் நடந்து முடிந்த எழுக தமிழ் பேரணியின் ஏற்பாடுகளில் தீவிரமாக செயற்பட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபாடு கொண்டவர்களான இவர்களின் கைதுக்கு எதிராக தேசிய, பிராந்திய, சர்வதேச மட்டங்களில் பலரும் குரல் கொடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment