கடந்த நவம்பர் 11,12,13 ஆகிய தேதிகளில் ஐதராபாத் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இந்திய பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் 12வது தேசியக் கருத்தரங்கு நடைபெற்றது. இந்தியா முழுவதிலுமிருந்து முக்கியமான பெண் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு தமது அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்தனர்.
’எல்லோருக்குமான ஊடகங்கள், ஊடகங்களில் பெண், மோதல் பகுதிகளில் செய்தி சேகரிப்பு, ஊடகங்கள் எதிர்கொள்ளும் மிரட்டல்கள், தெலுங்கானா என பல தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. 40 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகவியலாளராக செயலாற்றி வரும் கல்பனா ஷர்மா, அம்மு ஜோசப், போன்ற சீனியர்கள், சர்வதேச கவனிப்பிற்குட்பட்ட அரசியல் கட்டுரைகள் எழுதி வரும் ரோஹினி மோகன், நேஹா தீக்ஷித் போன்ற ஊடகவியலாளர்களும் பங்கேற்று சிறப்புரை வழங்கினர்.
நிகழ்வின் தொடக்க அமர்வில் எல்லோருக்குமான ஊடகங்கள் தலைப்பில் சிறுபான்மையினர், சாதியம்(தலித்) , ஆதிவாசிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஹிந்துஸ்தான் டைம்ஸின் சுதிப்தோ மோண்டல் இந்த அமர்வை தலைமை தாங்கினார். இந்த அமர்வில் இந்திய ஊடகங்களில் சாதியம் குறித்து தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜெயராணி ஆற்றிய உரை தேசிய அளவிலான கவனத்தைப் பெற்றிருக்கிறது.
கருத்தரங்கில் பெரும் வரவேற்பை பெற்ற அந்த உரையை thewire.in இணையதளம் பிரசுரித்துள்ளது. ஜெயராணி தமிழில் எழுதிய அந்த உரையை பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருந்தார். ஜெயராணி கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் ஊடகக் களத்தில் பத்திரிகையாளராக செயலாற்றி வருகிறார். சாதியம், தலித்கள், சிறுபான்மையினர், பாலின சமத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். சாதியம் குறித்து அவர் எழுதியக் கட்டுரைகளின் தொகுப்பு ஜாதியற்றவளின் குரல் என்ற தலைப்பில் நூலாக வெளிவந்து விருதுகளை வென்றது.
இந்திய பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் 12வது தேசிய கருத்தரங்கில் ஜெயராணி ஆற்றிய உரையின் முழு வடிவம்:
பொறுப்புமிக்க ஊடகவியலாளர்களாக நாம் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை கற்பனை செய்து பார்க்கலாம். இனி இந்திய ஊடகங்கள் அனைத்தும் சாதிய அத்துமீறல்களையும் ஒடுக்குமுறைகளையும் மட்டுமே முன்னுரிமை கொடுத்து பிரசுரிக்கவும் ஒளிபரப்பவும் வேண்டும் என திடீரென ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டால் நிலைமை எப்படி இருக்கும்? இச்சட்டத்தை மீறுகிற அல்லது மதிக்காத ஊடகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற ஒரு எமர்ஜென்சி நிலை உருவாகிறது. கற்பனை தானே! செய்து பார்ப்போம். நொடிக்கு நொடி பிரேக்கிங் செய்தியாக ஒரு தீண்டாமைக் கொடுமையை அம்பலப்படுத்த நேரிடும்; நிமிடத்திற்கு நிமிடம் சாதி அடிப்படையிலான பாலியல் வன்புணர்ச்சியை விவரிக்க வேண்டி வரும்; நாள்தோறும் நடந்தேறும் சாதிய வன்முறைகளை அம்பலப்படுத்தும் சூழல் உருவாகும். 24*7 ஒளிபரப்ப அவ்வளவு செய்திகளுக்கு எங்கே போவது என மிரளவே வேண்டாம். ஏனெனில் இந்நாட்டில் இந்த கொடுமைகள் அனைத்தும் இப்போதும்…இதோ நான் இந்த உரையை நிகழ்த்தும் இந்நொடி கூட நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின், ’மாற்றங்களுக்கு உட்படாத’ புள்ளிவிபரம் என்ன சொல்கிறதெனில் இந்தியாவில் ஒவ்வொரு இரண்டு மணி இரண்டு தலித்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். அதனால் நமக்கு ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பிரேக்கிங் செய்தி கிடைத்துவிடும். ஒவ்வொரு நாளும் மூன்று தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகின்றனர்.
எக்ஸ்க்ளூசிவ் என பிராண்ட் செய்து பாதிக்கப்பட்ட பெண்களின் முகத்தை மாஸ்க் செய்தோ மாஸ்க் செய்யாமலோ ( தலித் பெண் என்றால் பெரும்பாலும் மாஸ்க் செய்ய வேண்டிய தேவையே உருவாவதில்லை) காட்டிக் கொண்டே இருக்கலாம். ஒரு நாளில் இரண்டு தலித்கள் கொலை செய்யப்படுகின்றனர்; இரண்டு தலித் வீடுகள் எரிக்கப்படுகின்றன. எனவே டி.ஆர்.பிக்கும் பரபரப்புக்கும் சரிவே ஏற்படப் போவதில்லை. போர்ன் வீடியோக்களில் உணரும் கிளுகிளுப்பை விட இந்த நிஜ கொடூர வன்முறைக் காட்சிகளில் பரவசத்தை விதைக்கும்/தேடும் கெடுவாய்ப்பான காலகட்டத்தில் இந்த சரக்கு நன்றாகவே விற்பனையாகும். இந்தியாவின் ஆறு லட்சம் கிராமங்களும் ஊராகவும் சேரியாகவும் பிரிந்திருந்து தீண்டாமையையும் வன்கொடுமைகளையும் உயிர்ப்போடு வைத்திருக்கும் வரை, தலித்களுக்கான வாழ்வியல் நீதிகள் ஆதிக்க சாதியினரின் கரங்களால் காப் பஞ்சாயத்துகளில் எழுதப்படும் அவலம் தொடர்கிற வரை சாதிய அத்துமீறல் குறித்த செய்திக்கு ஒரு போதும் தட்டுப்பாடு வந்துவிடாது.
எனவே நமது கற்பனைப்படி அப்படியொரு சட்டம் கொண்டு வரப்பட்டால் புதிய செய்தியை உடைத்து உடைத்து சேனல் ஜாம்பவான்களின் கைரேகை அழிந்துவிடும். பாகிஸ்தானுடன் போரை ஊக்குவித்து போர் அறைகளை உருவாக்கியது போல சாதிக் கலவர அறை, வன்கொடுமை அறை, வன்புணர்ச்சி அறை, தீண்டாமை அறை, பசு பாதுகாப்பு அறை, கர் வாப்ஸி அறை என பல்வேறு அறைகளை உருவாக்கி புதிய புரட்சியை அவை உண்டாக்கிவிடும். இந்நாட்டில் சாதி ஆதிக்கம் எத்தனை மோசமாக நிலை கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள அப்படியொரு சூழல் உருவாக வேண்டும். இல்லையெனில் யானையை தொட்டுப் பார்த்த பார்வையற்றவர்களின் நிலை போல நம் கண்ணில் படுவதும் காதில் விழுவதும் மட்டுமே சாதியக் கொடுமைகளின் ஒட்டுமொத்த அளவு என்ற நம் (மூட) நம்பிக்கைக்கும் அலட்சிய மதிப்பீட்டிற்கும் முடிவே கிடைக்காது.
நாம் நம் கற்பனையை முடித்துக் கொண்டு நிஜத்திற்கு திரும்புவோம்!
இந்தியாவின் ஆயிரக்கணக்கான அச்சு ஊடகங்களும் நூற்றுக்கணக்கான காட்சி ஊடகங்களும் அலுக்கவோ சலிக்கவோ முடியாத அளவுக்கு ஒரு செய்திச் சுரங்கமாக, அள்ளக் குறையாத ’அட்சயப் பாத்திரமாக’ சாதிய அத்துமீறல்கள் நொடிக்க நொடிக்கு நடந்து கொண்டிருக்கையில் இன்றைய ஊடகங்கள் அவற்றுக்குத் தந்திருக்கும் இடமென்ன? ஒரு நாளின், ஒரு வாரத்தின், ஒரு மாதத்தின், ஓர் ஆண்டின் செய்தி தொகுப்பில் எத்தனை சதவீதம் சாதிப் பிரச்னைக்காக ஒதுக்கப்படுகிறது? ஒவ்வோர் ஆண்டும் தலித்களுக்கு எதிரான குற்றங்கள் 10-20 சதவிகிதம் அதிகரித்துக் கொண்டே போகின்றன. கொலை செய்யப்படும் தலித்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. நியாயம் இங்கே நிலைநிறுத்தப்பட்டிருக்குமானால் சம அளவில் ஊடகங்களில் அவற்றுக்கான இடமும் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. ஏன்? ஏனென்றால், இந்த சமூகம் எவ்வாறான சாதியப் படிநிலையைக் கொண்டிருக்கிறதோ, பெரும்பான்மைச் சமூகம் எத்தகைய சாதிய சிந்தனையில் ஊறிப் போயிருக்கிறதோ அதே தான் ஊடகங்களிலும் ஊடகவியலாளர்களிடமும் நிலவுகிறது. நீதியின் பொருட்டு கம்பீரமாக நிற்க வேண்டிய ஜனநாயகத்தின் நான்காவது தூண் சாதியின் பொருட்டு சிதைவுற்று சரிந்து கிடக்கிறது.
தமிழில் ஊழிக் காலம் என ஒரு சொற்றொடர் உண்டு. அப்படியெனில் உலகம் அழியும் காலமென்று பொருள். ஓர் ஊடகவியலாளராக இந்த ஊடகக் காலத்தை ஊழிக் காலமென்றே குறிப்பிட விரும்புகிறேன். ஏனென்றால் இச்சமூகத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் எதிர்மறையாக அவை கட்டுப்படுத்துகின்றன. இங்கே என்ன நடக்க வேண்டும், இன்று நான் எதை பற்றி பேச வேண்டும், ஒரு விஷயம் குறித்து எவ்வாறு நான் சிந்திக்க வேண்டும், என்ன முடிவு எடுக்க வேண்டும், எதை நான் உண்ண வேண்டும், எதை நான் வாங்க வேண்டும் என தனிமனிதர்களின் மூளையை இயக்குவதன் மூலம் சமூகத்தின் பன்முகத்தன்மையை சிதறடித்து அதிகார நியாயங்களுக்கு உட்பட்ட ஒருமுகத்தன்மையை நிலைநிறுத்துகின்றன.
ஒவ்வொரு நாள் விடியலிலும் அவை விதைப்பதுதான் இச்சமூகத்தின் அறுவடைப் பொருளாகிறது. ஒவ்வொரு நாள் முடிவிலும் அவை எழுதுவதுதான் எல்லாவற்றுக்குமானத் தீர்ப்பாகிறது.
அரசின், ஆளும் வர்க்கத்தின், அதிகாரத்தின், ஆதிக்கத்தின் குரலாக இருந்து உயர நின்று தனி ராஜ்ஜியம் நடத்தும் மைய நீரோட்ட ஊடகங்கள் எளியவர்களுக்கானவை அல்ல, ஒடுக்கப்பட்டோருக்கானவை அல்ல, சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகளுக்கானவை அல்ல. மிக நிச்சயமாக அவை தலித்களுக்கானவை அல்ல. மைய நீரோட்ட ஊடகங்களின் உரிமையாளர்களாக காட்சி/ அச்சு பாரபட்சமின்றி ஏறக்குறைய 95 சதவிகிதத்திற்கும் மேல் ஆதிக்க சாதியினரே உள்ளனர். 70-80% வரை அவற்றின் முக்கியப் பொறுப்புகளை ஆதிக்க சாதி ஆண்கள் வகிக்கின்றனர். இந்தியா ஊடகங்களில் ஒரு சதவிகிதம் கூட முடிவெடுக்கும் அதிகாரத்தை தலித்கள் கொண்டிருக்கவில்லை. ஊடகங்களுக்குள் பன்முகத் தன்மை கொலை செய்யப்பட்ட நிலையில், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான நியாயத்தையும் இடத்தையும் அவற்றிடம் எவ்வாறு பெற முடியும்? ஆங்கில ஊடகங்களில் குறிப்பாக பத்திரிகைகளில் அரிதாகவேனும் சாதி எதிர்ப்பு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் மொழிவாரி ஊடகங்களில் அதற்கான சாத்தியம் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் முதல் தலைமுறையாக கல்வி பெற்று வரும் தலித்களுக்கு அவர்களது, குடும்பச் சூழல், வளர்ந்து வந்த சமூகச் சூழல், நிறம், ஆங்கிலம் என பல விஷயங்கள் தடையாக இருப்பதால் மொழிவாரி ஊடகங்களில்தான் தஞ்சமடைகின்றனர். ஆனால் அங்கே அவர்கள் கவுரவமாக நடத்தப்படுவதில்லை. ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ, எழுதுவதற்கான வெளியோ பிற ஆதிக்க சாதியினர் அளவிற்கு வழங்கப்படுவதில்லை. ஊடகத்துறையில் பத்தாண்டு கால அனுபவம் பெற்றிருந்த நிலையில் நான் பணிபுரிந்த செய்திச் சேனலில் எனது சம்பளம் வெறும் 18 ஆயிரம் ரூபாய்தான். ஒரு டெய்லி ஷோவிற்கு ஸ்கிரிப்ட் ரைட்டராக இருந்து இரவு பகல் பார்க்காமல் வேலை பார்த்தேன். என் வேலைக்கான நன்மதிப்பையும் பெற்றிருந்தேன்.
ஆனால், ஊதிய உயர்வுக்கான நேரம் வந்தபோது, எனக்கு ஒரு நூறு ரூபாய் கூட உயர்வளிக்கப்படவில்லை. என்னை விட அனுபவமும் வேலைப் பளுவும் குறைந்த எனது சக ஊழியருக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருந்தது. காரணம் அவரது சாதி. என் ஜூனியரின் சம்பளம் அப்போது 40 ஆயிரம் ரூபாய். இதுதான் ஊடகங்களில் சாதியத்தின் பங்களிப்பு. இந்த சூழலால் வருமானத்திற்காக தன்னை முடக்கிக் கொள்வது அல்லது ஊடகத்துறையை விட்டே போய்விடுவது என இரண்டே வாய்ப்புகள்தான் தலித் ஊடகவியலாளர்கள் முன் இருக்கின்றன.
0 comments:
Post a Comment