நான் அண்மையில் பஸ்ஸில் செல்லும் போது அங்கு நின்றவர்கள் ஐயா... நீங்கள் தற்போது அரசியலுக்குள் போக முடியாதா? எனக் கேள்வி கேட்டார்கள். நான் நிச்சயமாகப் போக வேண்டும் எனச் சொன்னேன். அதற்கு பாபாவை வணங்குபவர்கள் அரசியலுக்குள் செல்லக் கூடாது என ஒருவர் கூறினார். சுவாமி....அரசியலுக்குள் போய்த் தான் ஏனையவர்களைத் திருத்த முடியும் எனக் கூறுகிறார் என்பதை அவருக்கு நான் எடுத்துக் கூறினேன் எனத் தெரிவித்தார் ஓய்வு நிலை நீதிபதி இ. வசந்தசேனன்.
கே. கே.எஸ். வீதி உடுவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பகவான் ஸ்ரீ சத்திய சாயி பகவான் நிலையத்தின் அங்குரார்ப்பண வைபவம் கடந்த-21 ஆம் திகதி இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
சத்திய சாயி நிலையங்களை உருவாக்குவதுடனும், பஜனை நடாத்துவதுடனும் மாத்திரம் நாங்கள் நின்று விடக் கூடாது. இவ்வாறான நிலையங்கள் மூலம் ஆன்மீகம், கல்வி, சேவை போன்றவற்றிற்கு எம்மை நாமே அர்ப்பணித்துச் செயலாற்ற வேண்டும்.
நான் நேற்றுக் கிளிநொச்சிக்குச் சென்ற போது அங்குள்ள மக்கள் தாம் தமது நாளாந்த வாழக்கையைக் கொண்டு நடாத்துவதில் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கி வருகிறோம் என்று குறிப்பிட்டனர். அரசாங்கம் கூட எங்களைக் கைவிட்டு விட்டது. எவ்வளவோ தொகையான பணம் வருகின்றது. ஆனால், எங்களுக்கு ஒரு வேளைச் சாப்பாட்டிற்கு கூடப் பணமில்லாமலிருக்கின்றோம் எனக் கூறிக் கவலைப்பட்டனர். நாங்களும் எங்கள் பணத்தில் சிறிது சிறிதாக எனினும் சேமித்து பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவை செய்தால் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகப் பெரிய உதவியாக அமையும்.
நீ சாயி அடியார் என வெறுமனே சொல்லிக் கொண்டு திரிவதில் பயனில்லை. முதலில் உன்னை நீயே திருத்திக் கொள் எனக் கூறுகிறார்.
எல்லா சாயி சகோதரர்களும் நல்லவர்களல்ல. ஆனால், எல்லா நல்லவர்களும் சாயி சகோதரர்கள். ஆகவே, சாயி சகோதரர்களில் நல்லவர்களையும், கெட்டவர்களையும் கண்டுபிடிப்பது கடினம். என்னைக் கேட்டால் நான் நல்லவர் என்று தான் சொல்லுவேன். அப்படித்தான் ஒவ்வொருவரிடமும் கேட்டாலும் நல்லவர்கள் என்று தான் சொல்லுவார்கள்.
நாங்கள் சுவாமி காட்டிய வழியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என எம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவ்வாறானால் மட்டுமே நாம் நல்லவர்கள்என்று சொல்வதற்கு அருகதையுடையவர்கள். எங்களை நாங்களே மாற்ற வேண்டும். அப்போது தான் எங்களைப் பார்த்து ஏனையவர்களும் மாறுவார்கள்.
நாங்கள் சுவாமியின் போதனையின் படி வாழ்க்கை நடாத்தவில்லை.
வாழ்க்கையில் எல்லோரும் பிழை விடுகிறோம். நான் கூடப் பிழை விடுகிறேன். ஆனால், நாங்கள் செய்வது பிழையானது எனத் தெரியாமலேயேதொடர்ச்சியாகப் பிழை விடுகிறோம் எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் வடபிராந்திய சத்திய சாயி சர்வதேச நிறுவனத்தின் தலைவர் கே. வி,சிவனேசன், முன்னாள் தலைவர் வைத்திய கலாநிதி ஆர்.கணேசமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
0 comments:
Post a Comment