தங்கள் உயிர் காப்பாற்றப்பட்டதற்கு, ஏழு மீனவர்கள் இந்திய கப்பற்படை கேப்டன் ராதிகா மேனனுக்கு கடமைப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தில் கடற்கரை பகுதியில் இம்மீனவர்கள் பயணம் செய்த கப்பல் தனது நங்கூரத்தை இழந்து விட்டது. மேலும், அவர்களின் படகின் எந்திரமும் வேலை செய்யவில்லை. மிகவும் ஆபத்தான கடல் பகுதியில் அவர்கள் தவித்தபடி இருந்தனர்.
இந்த மீனவர்களை மீட்க வங்கக்கடலில் ஒரு வாரமாக எந்த உதவியுமின்றி அவர்கள் சிக்கித் தவித்த சூழலில், இந்திய கப்பற்படை கேப்டன் ராதிகா மேனனின் உத்தரவின் பேரில் ஒரு எண்ணெய் டேங்கர் இவர்களின் மீட்பு உதவிக்கு வந்தது.
கடலில் சிறப்பான வீரதீரச் செயல் புரிந்த ராதிகா மேனனின் செயல்பாடுகளை அங்கீகரித்த சர்வதேச கடல்சார் அமைப்பின் (ஐஎம்ஓ) விருது லண்டனில் கடந்த திங்கள்கிழமையன்று அவருக்கு அளிக்கப்பட்டது.
இந்திய வணிக கப்பலில் முதல் பெண் கேப்டன் ராதிகா என்பது மட்டுமல்ல, கடலில் சிக்கித் தவிப்பவர்களை காப்பாற்ற தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் துணிவாக செயல்படுபவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் இந்த விருதை வென்ற ஒரே பெண் இவர் தான்.
கடந்த ஜூன் மாதத்தில், மீனவர்கள் பயணம் செய்த சிறிய படகிலிருந்து அவர்களை மிகப் பெரிய டேங்கருக்கு ஏணி மூலமாக கொண்டுவர மூன்று முயற்சிகள் தேவைப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கைக்கு ராதிகா மேனன் தலைமையேற்றார்.
அப்போது கடலலைகள் 9 மீட்டர் உயரத்துக்கு எழும்பியது. காற்றின் வேகம் 60-70 கிலோ மீட்டர் அளவுக்கு இருந்தது.
முன்னதாக, ஒடிசாவில் கோபால்பூர் கடற்கரைக்கு 2.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் ஒரு மீன்பிடி படகை சம்பூர்ணா ஸ்ரவ்ராஜ்யா டேங்கரின் இரண்டாவது அதிகாரி கண்டுள்ளார்.
தங்கள் படகில் இருந்த உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றை கடலலைகள் அடித்துச் சென்ற பிறகு, படகில் இருந்த ஐஸ் கட்டிகளைக் கொண்டே அவர்கள் உயிர் வாழ்ந்தனர்.
மீனவர்களை காப்பாற்றிய அனுபவம் குறித்து ராதிகா மேனன்
பிபிசி உலக செய்தி சேவை தொலைக்காட்சிப் பிரிவிக்கு அளித்த பேட்டியில் , ''அப்போது கடல் மிகவும் மிகவும் கொந்தளிப்பாக இருந்தது. பின்னர் கடலில் ஒரு தாழ்வழுத்தம் உண்டானது. அது இரண்டு அல்லது மூன்று நாட்கள் தேங்கியிருந்தது. பின்னர், அது ஒரு ஆழ் கடல் தாழ்வழுத்தமாக உருவானது'' என்று ராதிகா மேனன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், '' அது மிகவும் சவாலான பணியாக இருந்தது. ஆனால், நாங்கள் அதனை செய்தாக வேண்டும். நாங்கள் அச்செயலில் இறங்காவிட்டால் அந்த மீனவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பே இருக்காது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்'' என்று நிலையை விவரித்தார்.
பெண் கப்பல் கேப்டன்களுக்கு முன்னோடியாக விளங்கும் ராதிகா மேனன், தனது சாதனைகளை மற்றும் தான் ஒரு வழிகாட்டியாக விளங்குவதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தான் பணியாற்றும் கப்பல்களிலும், கப்பல் பணிகளிலும் பாலினம் என்பது முக்கியமானது அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
கப்பல் பணி இருபாலருக்கும் சம வாய்ப்புகளை தருகிறது. நீங்கள் பெண்ணாக இருந்தாலும் , உங்கள் பணியை செய்வது எப்படி என்ற புரிதல் இருந்தால் போதும். உங்களுடன் வேலை செய்பவர்கள் உங்களை பாராட்டுவர். உங்களுக்கு மதிப்பு, கிடைக்கும். உங்களுக்கு கீழே பணிபுரிபர்கள் உங்களின் உத்தரவை ஏற்று செயல்படுவார்கள்'' என்று நம்பிக்கையுடன் ராதிகா மேனன் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment