//]]>

Wednesday, November 30, 2016

யாழில் ஆசிரியைகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தும் கல்வி அதிகாரி யார்?


யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலயக்கல்வி அலுவலகம் ஒன்றில் - கறுப்புக் கண்ணாடி அறைக்குள் இருக்கும் அதிகாரி ஒருவரால் - பல ஆசிரியைகள் பாலியல் ரீதியான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி  வருவதாக - அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் - பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் - மத்திய கல்வி அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக – உரிய நடவடிக்கையினை எடுக்குமாறு பாராளுமன்றத்தில் வைத்து அவரால் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஐந்து கல்வி வலயங்களுள் கறுப்புக் கண்ணாடியின் பின் ஒளிந்திருந்து செயற்படும் - அந்த கேவலமான வலயக் கல்வி அதிகாரி யார்? அந்த அதிகாரியை வடமாகாணக் கல்வியமைச்சு உடனடியாக கண்டறியவேண்டும்.

பாதிக்கப்படும் ஆசிரியைகள் - தமது குடும்ப, சமூக நிலைகளால் – பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படுத்த முடியாத சந்தர்ப்பங்களை – தனக்கு சாதகமாக்கிக் கொண்டு செயற்படும் குறித்த அதிகாரி எவ்வித தயவும் இன்றி தண்டிக்கப்படவேண்டும்.

வடமாகாணத்தின் கல்விப் புலத்தினை அச்சுறுத்தி – தனது பாலியல் இச்சைக்கு அடிபணியவைக்கும் அந்த அதிகாரக் களங்கம் கல்விப்புலத்திலிருந்து அகற்றப்படவேண்டும்.

இதற்கு உடனடியாக நீதியான விசாரணைகளை நடத்தி வடமாகாணக் கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும்.  என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment