ஈழத் தமிழினத்தின் விடுதலைக்காகத் தம் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரரர்களுக்கு மாவீரர் நாளான இன்று சனிக்கிழமை(27) காலை யாழ். நல்லூர் பின் வீதியிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் சுடரேற்றி உணர்வு பூர்வ அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சிவாஜிலிங்கம் ஈகைச் சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மெழுகுதிரிகள் ஏற்றியும், தீபங்கள் ஏற்றியும் வீர மறவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் திருமதி- அனந்தி சசிதரன், வலி. வடக்கு மீள்குடியேற்றச் சங்கத் தலைவர் எஸ்.சஜீவன் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மாவீரர்களுக்குத் தமது இதய அஞ்சலிகளைச் செலுத்தினர்.
இதேவேளை, கடந்த மகிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் அழிக்கப்பட்ட யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் தற்போது படையினர் முகாம் அமைத்து ஆக்கிரமித்துள்ள நிலையில் துயிலுமில்லத்தின் முன்பாகவும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் கற்பூரம் ஏற்றி உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment