தமிழின விடுதலைக்காக தமது வாழ்வையே அர்ப்பணித்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தாயகப் பிரதேசமெங்கும் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் ஒருங்கமைப்பிலும், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் ஒருங்கமைப்பிலும்இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்குபற்றினர்.
கடைசியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னிப் பிரதேசம் இருந்த போது கடந்த 2008 ஆம் ஆண்டு மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. அதன் பின்னர் 8 ஆண்டுகள் கழித்து மிகவும் உணர்வுபூர்வமாக இந்நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
கிளிநொச்சி - கனகபுரம், முழங்காவில் துயிலுமில்லங்களில் இன்று மாலை 6.05 மணிக்கு ஒலி எழுப்பி சுடரேற்றி மாவீரர் பாடல்கள் ஒலிக்க விடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளன.
இதே வேளை முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுட்டிக்கப்பட்டுள்ளது.
மாவீரர்களின் நினைவுகள், தியாகங்களை உறவுகளும், பொதுமக்களும் நினைந்துருகி கதறியழுது அஞ்சலி செலுத்திய காட்சி அனைவரின் மனங்களையும் உருக்குவதாக அமைந்துள்ளது.
0 comments:
Post a Comment