//]]>

Tuesday, January 9, 2018

வலி. கிழக்குப் பிரதேச சபையை செல்வம் தலைமையிலான சுயேட்சைக் குழு கைப்பற்றும்:தேவராஜா(Photo)

இம்முறை உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் வலி. கிழக்கு மக்களைக் கடந்த காலங்களைப் போல ஏமாற்ற முடியாது. ஏனெனில், தம்முடைய தேவைகளைச் சரியாகப் புரிந்துகொண்ட மக்கள் தாமே இம்முறை சுயேட்சை அணியாக வாளிச் சின்னத்தில் வலி கிழக்கு உள்ளூராட்சிச் சபைக்கான தேர்தலில் நேரடியாக இறங்கியுள்ளனர். எனவே, வலி கிழக்குப் பிரதேச சபையை இம்முறை க. கதிர்காமநாதன் (தோழர் செல்வம்) தலைமையிலான சுயேட்சைக் குழு கைப்பற்றும் என சிரேஷ்ட சட்டத்தரணி சோ.தேவராஜா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

நேற்றுத் திங்கட்கிழமை(08)  யாழ். நவக்கிரியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இனம், மொழி, மதம் என்று மக்கள்முன் கூவிவிட்டுப் பின்னர் தமது சுய நலன்களுக்காக மக்களை விற்கும், ஊழல் ஏமாற்றுப் பேர்வழிகளைச் சரியாக இனங்கண்ட மக்கள், அவர்களை நிராகரித்து உண்மையான மக்கள் போராளிகளை, மக்கள் பணிக்காகவே தனது வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்த தோழர் க. கதிர்காமநாதனைத் தலைவராகக் கொண்ட சுயேட்சைக் குழவாக வாளிச் சின்னத்தில் இம்முறை வலி கிழக்கு பிரதேச சபைக்கான தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுவிப்பு, காணாமாலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிய போராட்டம், சுன்னாகம் நிலத்தடி நீர் மாசுபடுத்தப்பட்டமைக்கு எதிரான போராட்டம், சம்பூர் நிலக்கரி மின்நிலையத்திற்க்கு எதிரான போராட்டம், பெண்கள் சிறுவர்கள்  வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டம், கல்வியையும், சுகாதாரத்தையும் தனியார் மயப்படுத்தலுக்கெதிரான போராட்டம், மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்றக் கோரிய தொடர் போராட்டம் என இன ரீதியான, பால் ரீதியிலான, சூழல் சார்ந்த அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் குரல்கொடுத்து வந்த மக்கள் அவற்றை வெல்வதற்கான ஒரு மார்க்கமாக,  தமக்கான பிரதிநிதித்துவத்தைத் தாமே உறுதிசெய்யும் வகையில் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இது  இலங்கையின் அரசியல் வரலாற்றிலே இடம்பெற்றதொரு பாரிய பாய்ச்சலாகவே பலராலும் ஆச்சரியத்துடன் நோக்கப்படுகின்றது. இவ்வாறானதொரு மக்கள் அணி இதுவரை தேர்தலில் கலந்துகொண்டதில்லை.

எனவே, இம்முறை வலி. கிழக்குப் பிரதேச சபையை க. கதிர்காமநாதன் (தோழர் செல்வம்) தலைமையிலான சுயேட்சைக் குழு கைப்பற்றித் தொழிலாளர், விவசாயிகளின் அனைத்து வகையான தேவைகளையும் நிறைவேற்றுவதன் மூலம் இலங்கையிலேயே முன்னுதாரணமானதொரு பிரதேச சபையாக வலி. கிழக்கை உருவாக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment