//]]>

Thursday, November 24, 2016

நிதிக் கடன்கள் பெறுவதில் ஏமாறும் கிராமப் பெண்கள்: நல்லூர் பிரதேச செயலர் தெரிவிப்பு (Photos)


பல தனியார் நிறுவனங்கள் கிராமப் பகுதிகளுக்குச் சென்று பல ஏமாற்று வேலைகளிலும், மோசடிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.  நிதிக் கடன்களை வழங்குபவர்கள் தங்களது பெயர்களைச் சொல்லி கிராமப் பெண்களின் தலைகளில் கட்டி விட்டுச் செல்லுகின்றனர். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்குக்  கிராமப் புறப் பகுதிகளிலுள்ள பெண்கள் சரியான வலுவூட்டப்படாததும், அவர்களுக்குத் தேவையான பணத்தை இலகுவில் பெற்றுக் கொள்ள முடியாமையுமே காரணங்கள்  எனத் தெரிவித்தார் நல்லூர் பிரதேச சபையின் செயலர் ஆழ்வார்பிள்ளை சிறி.

யாழ். மாவட்டச் சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஸ்தாபகர் அமரர்- சண்முகம் ஞானப்பிரகாசத்தின் 26 ஆவது ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வும், பயன்தரு மரங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்றுப்  புதன்கிழமை(23) கந்தர்மடத்திலுள்ள காரியாலய மண்டபத்தில் மன்றத்தின் தலைவர் பி.குணேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

பல பெண்கள் தாம் பெற்ற நிதியை மீளச் செலுத்த முடியாமல் குடும்பங்களில் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். சிலர் தற்கொலை போன்ற தவறான முடிவுகளை எடுப்பதற்கும் இவ்வாறான சம்பவங்கள் வழிகோலுகின்றன. இந்த நிலை மாற வேண்டும்.

கிராம மட்டத்திலிருக்கின்ற பெண்களை வலுப்படுத்த வேண்டியது அவசியம். பெண்களை வலுவூட்டுவதன் ஊடாகவே நாட்டிலும், எமது பிரதேசங்களிலும் சிறப்பான அபிவிருத்தியைக் காண முடியும் என்றார்.

இந்த நிகழ்வில் மன்ற முன்னாள் தலைவரும், ஓய்வு நிலைக் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தருமான திருமதி- ருக்மணி ஆனந்தவேல் நினைவுச் சொற்பொழிவாற்றியதுடன் 50 பேருக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment