//]]>

Monday, December 12, 2016

யாழில் 60 வீதமானோர் போதைப் பொருட்களுக்கு அடிமையானோர் என்கிறார் அரச அதிபர் (Photos)



தற்போது யாழ். மாவட்டத்தில் போதைப்பொருட்கள் தொடர்பான அறிவின்மை மிகவும் குறைவாகக் காணப்படுகின்றது. யாழ். மாவட்டத்தில் 60 வீதமானவர்கள் மதுபாவனை, புகைபிடித்தல் மற்றும் ஏனைய போதைப்பொருட்கள் பாவனைக்கு ஆட்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன்.

ஐனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்திலிருந்து புதிதாகப் பல்கலைக்கழகத்திற்கு இணைத்து கொள்ளும் மாணவர்களுக்கான போதைப் பொருள் தடுப்புத் தொடர்பான வலுவூட்டும் செயலமர்வொன்று இன்று திங்கட்கிழமை(12) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 

இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அரச அதிகாரிகள் என்ற ரீதியில் நாங்கள் பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.இதன்மூலம் எந்தவொரு பலாபலன்களும் இல்லை.

இவ்வாறான நிலையில் பல்கலைகழகச் சமூகத்தின் ஊடாக மாற்றங்களை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம்.இதன் ஊடாக எதிர்காலத்தில் ஒரு வலுவான கட்டமைப்பினை உருவாக்கப் பல்கலைக் கழக மாணவர்கள் முன்வரவேண்டும் என்ற நோக்கில் எமது அரசாங்கத்தின் கொள்கைகள், செயற்பாடுகள் அமைந்துள்ளன.

நாட்டின் தேசிய வருமானத்தில் இவ்வாறான போதைப்பொருட்களும் முக்கிய பங்கினை வகித்து வருகின்றது என்பது மிகவும் பாரதூரமான விடயம்.

இளைய சமூதாயம் வாழ வேண்டும். அதற்காக நாமனைவரும் ஒருமித்து மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். இவ்வாறான நிலை ஏற்படும் போதே எமது எதிர்காலம் சிறப்பாக அமையும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் போதைப் பொருட்கள் கட்டுப்பாட்டு மையத்தின் இணைப்பாளர் ஆர்.உதயகுமார், மற்றும் மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள், மாவட்டச் செயலக உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment