வர்தா புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. ஆனால் சென்னையில் மட்டும் மதியம் இரண்டு மணி நிலவரப்படி, 288 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் 224 சாலைகள் பாதிப்படைந்துள்ளது. சாலை தடுப்புகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. அடுக்குமாடி கட்டிடங்களில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
ரயில்வே நிலையம் மற்றும் பல இடங்களில் மேற்கூறைகள் காற்றில் பறந்தன. இதனால் ஒருவர் பலியாகியிருக்கிறார். பலருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது. சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் சேதமடைந்துள்ளன.
நூற்றுக்கணக்கான குடிசைகள் இருந்த இடம் தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அரசின் கணக்கெடுக்கின் படி 24 குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதுவரை இரண்டு பேர் பலியாகியிருக்கிறார்கள்.
இது தவிர, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த மேலமையூரில் சுவர் இடிந்து விழுந்து குழந்தை ஒன்று பலியாகியுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இதே போல் வர்தா புயல் பெரும் தாக்கத்தையும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சாலையோரத்தில் உள்ள கடைகள் அத்தனையும் சூறைக்காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. வர்தா புயலின் தீவிரத்தால் சென்னையிலிருந்து புறப்படும் 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் நோக்கி வந்த 25 விமானங்கள் வெவ்வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இதில் 17 உள்நாட்டு விமானங்கள் மற்றும் 8 சர்வதேச விமானங்கள் அடக்கம் . திருப்பதி விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
சென்னை மாநரகம் எங்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியின் அறிவிப்பின் படி, இதுவரை சென்னையில் மட்டும் 3000 கம்பங்கள் பழுதடைந்துள்ளன. 30க்கும் மேற்பட்ட ட்ரான்ஸ்ஃபாம்கள் பழுதடைந்துள்ளன. இதனால் சென்னை நகரமே இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பழவேற்காடு மற்றும் மீஞ்சூர் பகுதியில் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
புயலின் மையப்பகுதி இன்று மதியம் பழவேற்காடு, ஸ்ரீஹரிகோட்டா இடையே 2.30 மணி அளவில் கரையை கடந்துள்ளது. இது கிழக்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை 6.30 மணிக்கு முழுமையாக கரையைக் கடக்கும். இந்நிலையில் மணிக்கு 90 கிலோ மீட்டர்வரை காற்று வீசும். இந்த காற்றின் வேகம் மரக்காணம் முதல் ஸ்ரீஹரிகோட்டாவரை பரவியிருக்கும். இந்த காற்றின் வேகம் இரவு எட்டு மணிவரை நீடிக்கும். இன்று இரவு 11.30 மணிக்கு இந்த வர்தா புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். மேலும் இன்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
0 comments:
Post a Comment