யாழ்.சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வருடாந்தத் திருவாசக விழா நாளை ஞாயிற்றுக்கிழமை(01) காலை-09 மணி முதல் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
வழமை போன்று தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயத்தில் பூசை வழிபாடுகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து நாயன்மார்களது திருவுருவப் படங்களும், திருவாசக ஏடுகளும் ஊர்வலமாக ஆச்சிரம மண்டபத்திற்குத் திருவாசக பாராயணத்துடன் எடுத்து வரப்படும்.
அதனைத் தொடர்ந்து இடம்பெறும் விழாவில் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசியுரை நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து பக்க வாத்திய சகிதம் திருவாசக பண்ணிசை, "திருவாசகத்துள் கற்றோர் மனதைக் கவர்வதில் விஞ்சி நிற்பது தத்துவ அறிவே! பக்தி உணர்வே!" எனும் தலைப்பில் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி அதிபர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம் மற்றும் கம்பர் மலை பெரிய தம்பிரான் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வு, திருவாசகப் பேருரை என்பனவும் இடம்பெறும்.
இதன் போது முன்னாள் இந்து கலாசார அமைச்சர் அமரர் தியாகராஜா மகேஸ்வரனின் ஒன்பதாவது ஆண்டை நினைவுறுத்தும் வண்ணம் 140 மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்களும் வழங்கப்படும். புற்றளை மகாவித்தியாலய அதிபர் ஆ.சிவநாதன் நினைவுப் பேருரையாற்றுவார்.
0 comments:
Post a Comment