//]]>

Thursday, December 1, 2016

இன அழிப்பிற்கு ஈ.பி.டி.பியும், தலைமையும் பொறுப்புக் கூற வேண்டும்; கஜேந்திரகுமார் அதிரடி


நடந்து முடிந்த இன அழிப்பிற்கு ஈ.பி.டி.பியும் அதனுடைய தலைமையும் பொறுப்புக் கூற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது. இந் நிலையில் டக்ளஸ் தேவானந்தா அண்மைக் காலமாகக் கூறி வரும் கருத்துக்கள் வேடிக்கையாகவே எமக்குத் தெரிகிறது எனத் தெரிவித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை(01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

தற்போதைய அரசாங்கம் தங்களுக்கு எடுபிடியாகக் கூட்டமைப்பை வைத்திருக்கும் காரணத்தால் டக்ளஸ் தேவானந்தா தேவைப்படாத ஓர் நிலையில் அவர் ஏதோவொரு வகையில் மக்கள் மத்தியில் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகவும், அவரால் 30 வருடங்களுக்கு மேலாக எமது மக்களுக்குச் செய்யப்பட்ட அநியாயங்களை மூடி மறைக்கும் வகையிலும் அண்மைக் காலமாகக் கருத்துக்கள் வெளியிட்டு வருகிறார்

வடகிழக்கில் தமிழருக்கு எதிராக மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்களுக்கும் எதிராகவும் மிக மோசமான வகையிலும், கொடூரமான வகையிலும் வன்முறை மற்றும் போர்க்குற்றம் புரியுமளவிற்கு ஈ.பி,டி.பி கட்சி கடந்த காலங்களில் செயற்பட்டமை அனைவருக்கும் தெரிந்த விடயம்.

தமிழ் மக்களின் பொறுப்புக் கூறல் விடயத்தில் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிய தரப்புக்களான இராணுவம், முப்படைகள் மட்டுமல்லாமல் ஒட்டுக் குழுக்கள் செயற்பட்டதையும் விசாரித்துத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை எனவும் தெரிவித்தார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment