'அ.தி.மு.க தலைமையை ஏற்க வாருங்கள்' என அதிமுக மூத்த நிர்வாகிகள் சசிகலாவை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை ஆயிரம் விளக்கிலுள்ள கிரீம்ஸ் சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த-5ஆம் திகதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவிலுள்ள எம்.ஜி. ஆர் சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவை ஜீரணிக்க முடியாமல் அ.தி.மு.க தொண்டர்கள் சமாதியிலும், அவரது போயஸ் கார்டன் இல்லத்திலும் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.
இதனிடையே, முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக போயஸ் கார்டன் இல்லத்தில் இடம்பெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் சசிகலா, முதல்வர் ஓ.பி.எஸ். பன்னீர்ச் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டு தலைமைச் செயலகம் சென்றனர்.
இந்த நிலையில் போயஸ் கார்டன் செல்லும் வழி எங்கும் தொண்டர்கள் குவிந்த வண்ணமிருந்தனர். அவர்களைக் கார்டனுக்குள் செல்லத் திடீரென சசிகலா அனுமதியளித்தார். அனைவரும் வரிசையில் நின்று கொண்டு கார்டனுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்குச் சசிகலா ஆறுதல் கூறினார்.
இதனிடையே, அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள், மதுசூதன், செங்கோட்டையன், வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி, சைதை துரைசாமி, ராஜன் செல்லப்பா, டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் இன்று திடீரென போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தனர். அவர்கள், சசிகலாவைச் சந்தித்தனர்.
இதன்போது "அம்மாவின் வழியில் கட்சியை வழி நடத்த வேண்டும். கட்சியின் அரணாக இருந்து வழி நடத்த வேண்டும். கட்சியின் மையப்புள்ளியாக செயல்பட வேண்டும். தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என வலியுறுத்தினர்.
இதனையடுத்துத் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment