//]]>

Tuesday, October 10, 2017

அரசியல் கைதிகளது குடும்பங்கள் விடும் கண்ணீரும், அனுபவித்து வரும் வேதனைகளும் தமிழ்மக்கள் அனைவருக்குமானது


உண்ணாவிரதமிருந்து வரும் குறித்த மூன்று அரசியல் கைதிகளுடைய உடல் நிலை மோசமடைந்துள்ளமையால் அவர்களது குடும்பங்கள் விடும் கண்ணீரும், அனுபவித்து வரும் வேதனைகளும் அவர்களுக்கு மாத்திரம் உரியதல்ல.  தமிழ்மக்கள் அனைவருடையதும் கண்ணீரும், வேதனையுமாக உள்ளது. இதற்கு இலங்கை அரசாங்கம் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் அமைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார். 

தங்களது வழக்குகளை வேறிடங்களுக்கு மாற்ற வேண்டாம் எனக் கோரி அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு  ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும், அரசியல் கைதிகள் அனைவரது விடுதலையை வலியுறுத்தியும் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நேற்று முன்தினம்  திங்கட்கிழமை(09) முற்பகல் யாழ். நகரில் முன்னெடுக்கப்பட்டது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,  

அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த- 14 நாட்களாக உண்ணாவிரதமிருந்து வரும்  தமிழ் அரசியல் கைதிகள் மூவர் உடல் நிலை மோசமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக  எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த வேதனை எங்களால் எளிதில்  தாங்க முடியாததொன்று. 

உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அரசியல் கைதிகள் மூவருடையதும் கோரிக்கைகள் நியாயமானவை. இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சமத்துவமான நீதி வழங்கப்பட்டுள்ளது என்றால் உண்ணாவிரதமிருந்து வரும் அரசியற் கைதிகளுடைய கோரிக்கைகளை அரசாங்கம் உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் அரசியல் கைதிகள் தொடர்பாக உறுதியான தீர்மானம் மேற்கொண்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். 

உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அழுத்தம் கொடுக்கும்  வகையிலேயே யாழ்ப்பாணத்தில் 17 அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். 

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த அனைவரும் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக சிவப்பு மையினால் தமது பெருவிரல் அடையாளத்தைப் பதிவு செய்துள்ளனர். எதிர்வரும் நாட்களில் இந்த அடையாளத்தை நாங்கள் இரத்தத்தினால் வைப்பதா? இல்லையா? என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும்.  நாங்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் யாருக்கும் எதிரான போராட்டமல்ல. தமிழ்மக்களுடைய எதிர்காலத்திற்காகவும், அவர்களின் அரசியலைப் பாதுகாப்பதற்காகவுமே வீதியில் இறங்கிப் போராடுகின்றோம். 

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடிய 17 அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனாவுக்குக் கோரிக்கைக் கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதனால் அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளுமாறும், அனைத்து அரசியல் கைதிகள் தொடர்பாகவும்  அரசியல் தீர்மானமெடுத்து நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பான கோரிக்கைக் கடிதங்கள் சட்டமா அதிபர் திணைக்களம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நீதி அமைச்சு  ஆகியவற்றிற்கும் அனுப்பி வைத்துள்ளோம். ஆனாலும், எங்களது கோரிக்கைகளுக்கு இதுவரை சம்பந்தப்பட்ட தரப்பிடமிருந்து நியாயமான, நாங்கள் எதிர்பார்த்துள்ள பதில் கிடைக்கவில்லை. 

அரசியல் கைதிகளுடைய பிரச்சினை அவர்கள் தொடர்பான பிரச்சினை மாத்திரமல்ல. தமிழ்மக்களுடைய அரசியல் தொடர்பான பிரச்சினையுமாகும். எனவே, தமிழ்மக்களுடைய எதிர்காலத்திற்காகத் தமிழ்மக்கள் அனைவரும் ஒரே அணியில் ஒன்று திரண்டு அரசியல் கைதிகளுடைய விடுதலைக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுக்க முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment