யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்ரோபர் மாதம் யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் யாழ்.பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு இன்று வெள்ளிக்கிழமை(30) யாழ்.நீதவான் நீதிமன்றப் பதில் நீதவான் வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்தச் சந்தர்ப்பத்தில் பொலிஸார் தமது மேலதிக அறிக்கையை மன்றில் தாக்கல் செய்ததுடன், சம்பவம் தொடர்பான புலன் விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டனர். அத்துடன் அரச பகுப்பாய்வு திணைக்களம் மற்றும் இலத்திரனியல் தடயங்கள் தொடர்பான கொழும்பு பல்கலைக் கழகத்தின் அறிக்கைகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை எனவும் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.
இதனையடுத்துச் சந்தேகநபர்களை எதிர்வரும்-13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
0 comments:
Post a Comment