//]]>

Saturday, December 31, 2016

இலங்கைக்கு வருகை தருமாறு தமிழக முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்படும்(Photo)

நாம் எதிர்வரும் ஐந்தாம் திகதியளவில் இந்தியாவிற்குச் செல்லவிருக்கிறோம். அங்கு சென்று கட்சித் தலைவர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அ.தி.மு.க கட்சியின் செயலாளர் நாயகம், தமிழக முதலமைச்சர் ஆகியோரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தச் சந்திப்பின் போது இலங்கையில் தமிழர்கள் படுகின்ற துயரங்களை எடுத்துக் கூறவுள்ளோம். நாங்கள் இலங்கையிலுள்ள இந்தியாவின் உயர் ஸ்தானிகரைச் சந்திக்கவுள்ளோம். அதன் பின்னர் தமிழகம் சென்று முதலமைச்சர் பன்னீர்ச் செல்வம், அ.தி.மு.க கட்சியின் செயலாளராகத் தெரிவாகியுள்ள சசிகலா ஆகியோரைச் சந்தித்து இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுவோம். எமது அழைப்பை ஏற்றுத் தமிழக முதலமைச்சர் கண்டிப்பாக இலங்கை வருகை தருவார் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் எனத் தெரிவித்தார் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் பொன் மதிமுகராஜா விஜயகாந்த். 

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(30) பிற்பகல்-01 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

இந்த வேளையில் தமிழகத்தின் அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் நாயகமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு அண்ணா திராவிடர் முன்னேற்றக்  கழகத்தின் இலங்கைத் தலைமைக் கழகம் சார்பிலும், அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையின் சார்பிலும், எம்.ஜி.ஆர் .முன்னேற்றக் கழகம், எம்.ஜி.ஆர்  நற்பணிமன்றம், எம்.ஜி.ஆர் இளைஞரணியின் சார்பிலும் அவருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் நாம் பெரு மகிழ்ச்சியடைகிறோம்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி- ஜெயலலிதா, எம்.ஜி. ஆர் மற்றும் பொன் மதிமுகராஜா ஆகியோரின் சிலைகளை யாழ்.மாநகரசபையின் எல்லைக்குள் நிறுவுவதற்கு யாழ்.மாநகர சபை ஆணையாளரிடம் அனுமதி கேட்டிருக்கிறோம் எனத் தெரிவித்த அண்மையில் யாழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆனால், யாழ்.மாநகர ஆணையாளர் சில அரசியல் காரணங்களுக்காக அனுமதி தர மறுக்கிறார். தமிழக முன்னாள் முதலமைச்சர் உள்ளிடடோருக்குச் சிலை அமைக்க சட்டபூர்வமான அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். 

இந்தியாவின் திருச்சி முகாமில் வாடும் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.  இலங்கைக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். எங்களது மாவீரர்களின் கல்லறைகள் மீள உருவாக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.  

மேலும் எம்.ஜி.இராமச் சந்திரன் ஈழத் தமிழர்களுக்காகப் பாடுபட்டவர். ஆகவே, அவரது சிலைகளை உடைத்தவர்கள் யாராகவிருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். வடபுலத்தில் கடந்த காலங்களில் உடைக்கப்பட்டுள்ள அவரது சிலைகளை எமது சொந்தநிதியில் புனரமைக்க நடவடிக்கை எடுப்போம் என்றார். 

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்  செல்லையா விஜயரட்ணமும் கலந்து கொண்டிருந்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment