//]]>

Saturday, December 31, 2016

அரசினால் வழங்கப்படவுள்ள மீன்பிடிப் படகில் பல்வேறு சந்தேகங்கள்: வடமராட்சி கடலோடிகள் அமைப்பு சுட்டிக் காட்டு (Photos)


யாழ்ப்பாணம் - வடமராட்சி கடலோடிகள் ஐக்கிய சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் மீனவர்களுக்காக விசேட கூட்டம் ஒன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை சுப்பர்மடத்தில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் நேற்றுக் காலை 30.12.2016 வெள்ளிக்கிழமை பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலய முன்னாள் அதிபர் அ. சா. அரியகுமார் தலைமையில்   ஆரம்பமானது.

சுண்டிக்குளம் தொடக்கம் காங்கேசன்துறை வரையிலான கடற்தொழில்  பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில்  மீனவர்களின் பல்வேறு வகையான பிரச்சினைகளும் ஆராயப்பட்டன.  

அதில் முக்கியமாக தொண்டைமானாற்றில் உவர்நீர் தடுப்புக் கதவால் ஏராளமான இறால் பிடிப்பாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள விடயமும், மத்திய அரசினால் மீனவர்களுக்கு 2 கோடியே 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான பெரிய படகு வழங்குவது தொடர்பில் பல்வேறு கருத்துக்களும் முன் வைக்கப்பட்டன.

மேற்படி கூட்டத்தில் கடலோடிகள் அமைப்பின் அங்கத்துவர்கள், மீனவ மக்கள், கல்வியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.  

வடமராட்சி கடலோடிகள் ஐக்கிய சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் செல்லத்துரை நற்குணம் உரையாற்றுகையில்,

அங்கத்தவர் இல்லை என்றால் எமது அமைப்பே இல்லை. சுண்டிக்குளம் தொடக்கம் காங்கேசன்துறை வரையிலான 35 மீனவக் கிராமங்களை இணைத்து நிர்வாகசபை உறுப்பினர்களை தெரிவு செய்வதில் தான் கடந்த 8 மாதங்களாக செலவிட்டோம். ஒவ்வொரு கிராமத்தையும் பிரதிபலிக்கக் கூடிய ஒருவர் நிர்வாகசபைக்குள் இருக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.  அதன் காரணமாக ஒரு வலுவான அமைப்பை தற்போது உருவாக்கியுள்ளோம். இதன் செயற்பாடுகள் அடுத்த வருடம் தொடக்கம் முழுவீச்சில் இடம்பெறும்.   தற்போது எமது அமைப்பால் முக்கியமான இரு பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


முதலாவதாக, இலங்கை மத்திய அரசினால் 55 - 60 அடி வரையிலான பெரிய அளவிலான படகுகள் 2 கோடியே 60 இலட்சம் பெறுமதியில் வழங்கப்பட உள்ளதாக நீரியல்வளத் திணைக்களமூடாக எமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 1 கோடியே 30 இலட்சம் ரூபாய் மானியம் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. மீதி  1 கோடியே 30 இலட்சம் ரூபாயை பணமாக செலுத்த வேண்டுமென கூறப்பட்டுள்ளது. மீனவ சமூகத்தினராகிய எங்களால் இவ்வளவு பெரிய தொகையை அப்படியே செலுத்த முடியாதுள்ளது. அதனை கட்டம் கட்டமாக செலுத்துவதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுள்ளோம். குறித்த திட்டம் தொடர்பில் தாங்கள் கூறும் சீனோர் நிறுவனத்திடம் தான் படகினை கொள்வனவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எங்களுக்கு காலாகாலத்துக்கு பயன்படுத்தக்கூடிய அளவுக்கு தரம் அதிகமுள்ள படகை சீன நிறுவனம் தயாரித்து தருமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. குறித்த மானியத்தை எம்மிடம் வழங்கினால் நாம் அதனை இலங்கையின் வேறு இடங்களில் உள்ள படகு கட்டித்தரும் நிறுவனங்களை அணுகி குறைந்த விலையிலும், தரமான படகை வடிவமைத்து பெற்றுக் கொள்ளுவோம். அரசு கூறிய 55 அடி நீள படகினை கொழும்பில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இருந்து எமது சக நண்பர்    ஒருவர் ஒரு கொடியே 30 இலட்சம் ரூபாவிற்கு உள்ளாக வடிவமைத்துள்ளார். 

இதனால் தான் எமக்கு இத்திட்டத்தில் சில சந்தேகங்கள் உள்ளன.  இந்த படகு தொடர்பில் எமது மீனவர்களை அழைத்து யாரும் கலந்துரையாடவுமில்லை.  இவை தொடர்பில் நீரியல்வளத் திணைக்களத்திடம் கேட்டால் அவர்கள் மேலிடத்து உத்தரவு எனக் கூறி எமது சந்தேகங்களுக்கு பதிலளிக்க மறுக்கின்றனர். இருந்தும் எமது பகுதியில் 5 பேர் குறித்த படகுக்காக விண்ணப்பித்துள்ளனர். அரசின் ஊடாக கிடைக்கும் படகின் அதிக விலையைப் பார்த்து இங்குள்ள பல மீனவர்களின் ஏக்கம் இன்னமும் தீரவில்லை. 

இரண்டாவதாக, தொண்டமானாறு கடனீரேரியை நம்பி 500 க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. தொண்டமானாறு நீரேரியில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் சன்னதி முருகன் கோவிலுக்குப் பின்னால் கடல்நீர் தடுப்புக் கதவு அமைக்கப்பட்டமையினால் கடந்த 150 வருடங்களுக்கும் மேலாக அப்பகுதியில் இறால் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் சிறு மீனவர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

குறித்த பகுதியில் சீசனுக்கு 3 இலட்ச்சத்துக்கும் மேல் இறாலால் வருமானம் ஈட்டுபவர்களும் இருக்கின்றார்கள். தொண்டமானாறு, அச்சுவேலி, புத்தூர், அக்கரை பகுதிகளில் வாழும் மீனவ மக்களின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களை உவர் நீர் பாதிக்காத வகையிலும், இறால் பிடிப்பதை நம்பி வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படாத வகையிலும் செயற்படுத்த முடியும்.  சரியாக திட்டமிடாமல் அமைக்கப்பட்ட   குறித்த கதவினால் மீனவ மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த இரு விடயங்கள் தொடர்பிலும் கடிதமூடாக இங்கு வரவிருக்கும் ஜனாதிபதியிடம் நேரடியாக முறையிட உள்ளோம். என்றார்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற  கொழும்பு இந்துக்கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபரும், பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் தவிசாளருமான சிவா கிருஷ்ணமூர்த்தி உரையாற்றுகையில், 

கடலோடிகள் அமைப்பானது ஒரு சமூகம் சார்ந்த அமைப்பாகவே என்றும் இருந்துள்ளது. உலகிலேயே 500 மில்லியனுக்கும் அதிகமானோர் கடலோடி சமூகத்தை சார்ந்தவர்களே. இது ஒரு கணிசமான தொகையாகும். அந்த வகையில் தான் வடமராட்சியிலும் கடலோடிகள் அமைப்பு செயற்படத் தொடங்கியுள்ளது.  இப்படியான அமைப்புக்களை அமைத்தால் மட்டும் போதாது, அவை தொடர்ந்து இயங்க எல்லோரும் முதலில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். உலகிலேயே முதன் முதலில் கண்டங்களுக்கு, புதிய நிலங்களுக்கும் கொலையாளிகள் இருக்கின்றார்களோ அல்லது கொடிய விலங்குகள் இருக்கின்றனவோ என்கிற பயமோ பதற்றமோ இன்றி முதலில் சென்றவர்கள் கடலோடிகள் தான். ஆகவே அந்த அமைப்பை சேர்ந்த நாங்கள் நிச்சயம் பெருமையடைய வேண்டும்.


மீனவர் ஒருவர் கடலுக்கு சென்று திரும்பி வரவில்லை என்றால் 15 மீனவர்கள் அவரைத் தேடி கடலுக்கு செல்லும் நிலை இருக்கிறது. இது அன்று தொட்டு இன்று வரை அந்த நிலைமை உள்ளது. அந்த ஒற்றுமை நீடிக்க வேண்டும். எங்களுடைய தலைமைத்துவங்களை நாங்கள் இழந்து வருகிறோம். எப்போதும் கடலோடிகள் அமைப்பு ஒரு சமுதாயத்தின் முன்னோடி அமைப்பாக இருந்தால் தான், மீனவ மக்களின் அரசியல், சமூக, பொருளாதாரத்தை மேலும் சரியான திசையில் முன்னேற்ற முடியும். நாங்கள் தொழில்வசதி வாய்ப்புக்கள் வந்து வேறு மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றாலும் எங்களுடைய தனித்துவத்தை ஒரு போதும் இழக்கக் கூடாது. ஆகவே, நாங்கள் தனித்துவம் மிக்க ஒரு சமுதாயம் என்பதனை கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு எங்கள் அனைவருக்கும் இருக்கின்றது.

பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலய முன்னாள் அதிபர் அ. சா. அரியகுமார் உரையாற்றுகையில், 

கடலோடிகள் என்கிற பெயரை முதன்முதலாக இப்பகுதியில் இந்த அமைப்பே பதிவு செய்திருக்கிறது. வழமையாக மீனவர் என்கிற பெயரையே பயன்படுத்தி சங்கங்கள் பதிவாகி இருந்தன. ஆதி காலம் முதலே நாங்கள் கடலோடிகள் தான்.  இன்றும் அஞ்சாமை, வீரம் எங்கள் மத்தியிலே உறங்கிக் கொண்டிருக்கின்றது. யுத்தத்தின் பின்னர் எமது சமூகத்தை விலை பேச பலர் வருகின்றார்கள். விரும்பியோ விரும்பாமலோ அவர்களோடு இழுப்பட்டுச் செல்ல சிலர் இருக்கின்றார்கள்.


அதற்கு நாம் ஒருபோதும் சோரம் போய்விடக் கூடாது.  எதையும் நிர்ணயிக்கக் கூடிய சக்தியுள்ளவர்களான கடலோடிகள் சமூகத்தினரை இன்று குறைத்து அந்த இடத்துக்கு வேறொருவரை மேலோங்கச் செய்யும் விடயங்கள் எல்லாம் அரங்கேறி வருகின்றன.. 1977 ஆம் ஆண்டுக்கு முன்பும், 1983 ஆம் ஆண்டுக்கு பின்பும்  கடந்த பருத்தித்துறை, முல்லைத்தீவு, மன்னார் தொகுதிகளில் கடலோடி சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் போட்டியிட்டு வென்றிருந்தார்கள். இந்த நிலையினை எங்களின் இளைஞர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

வடமராட்சி கடலோடிகள் ஐக்கிய சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் இளையதம்பி குமரகுருசாமி உரையாற்றுகையில்,

எங்களது பிரதிநித்தித்துவம் தேவையில்லாமல் பறிபோகிறது. எனும் போது சில விடயங்களை இங்கே சுட்டிக் காட்ட வேண்டி உள்ளது.
காலா காலமாக பருத்தித்துறை தொகுதி மீனவ சமுதாயத்துக்கு என ஒதுக்கப்பட்டது. அதனை கே. துரைரட்ணம் எம்.பி 20 வருடங்களாக பாதுகாத்து வந்தார்.

ஆனால், இன்று இங்கே இருந்து உள்ளூராட்சி, மாகாணசபை, பாராளுமன்றம் வரை ஒருவரைக் கூட நிறுத்த முடியவில்லை. நாங்கள் ஒரு பிரதிநிதியை தெரிவு செய்து கொண்டு நமது அரசியல் கட்சிகளிடம் சென்றால், பார்ப்போம், காத்திருங்கோ, முயற்சிக்கிறோம். என்று தான் சொல்கிறார்களே ஒழிய ஒரு சாதகமான பதிலை காண முடியவில்லை. இதனால் அடுத்து வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் அதனை எமது சமூகத்தினர் புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளனர். என்றார்.

கடலோடிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் கா. அண்ணாமலை கருத்து தெரிவிக்கையில், 

கடல் தொழிலில் ஈடுபடும் எங்களின் நிலை தொடர்பில் பிரச்சினைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வடமாகாண மீன்பிடி அமைச்சுக்கு அதிகாரம் இல்லை என்று கூறப்படுகின்றது. மத்திய அரசோ எங்கள் விடயத்தில் சரியான அதிகாரிகளை அனுப்பி ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதில்லை. தான்தோன்றித்தனமாக செயற்படுவதாகவே தோன்றுகிறது. இதனால் பெரும் இக்கட்டு நிலையினை எம்மக்கள் சந்தித்து வருகின்றனர்.


எமது பாரம்பரிய மீன்பிடித் துறைமுகமான மயிலிட்டி இன்று சிறீலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நாங்கள் உண்மையில் ஒன்றுபட்டு செயற்படுவோமாக இருந்தால் மயிலிட்டி துறைமுகம் வெகு விரைவில் எங்களிடம் வரும். இந்திய மீனவர்களினால் பல தசாப்தங்களாக எம் மக்கள் படும் அவலங்களுக்கு இன்று வரை உரிய தீர்வு இல்லை.

இதனை இலங்கை, இந்திய அரசுகள் பேசித் தீர்ப்பதாக இல்லை. கடற்தொழிலாளர்களிடம்  சேமிப்பதென்பதே கிடையாது. கிடைக்கும் பணத்தை உடனடியாக செலவு செய்து விடுவார்கள். அவர்களை பணத்தை சேமிக்கும் நிலைக்கு மாற்ற வேண்டும். அதற்கு எமது கடலோடிகள் அமைப்பு முன்னுதாரணமாக இருக்கும். மீனவர்கள் சேமிப்பார்களாக இருந்தால் கடும் மழை, சூறாவளிக் காலங்களில் அவர்கள் வேறு யாரிடமும் கையேந்தாமல் வாழ முடியும். புயல் வருகிறது கடலுக்கு போக வேண்டாம் என மீனவர்களை எச்சரிக்கும் அரசு அவர்களின் வாழ்வாதாரத்துக்கான எந்த உதவிகளையும் வழங்குவதில்லை. எங்களின் கைகளை நாங்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பலப்படுத்த வேண்டும். அப்போது தான் எமக்கு விடிவு ஏற்படும் என்றார்.

மேலதிக தகவல்களுக்கு: 

வடமராட்சி கடலோடிகள் ஐக்கிய சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் செல்லத்துரை நற்குணம் - கைபேசி எண்: 0772890474






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment