அண்மையில் கோரத் தாண்டவமாடிய வரதா புயலால் கும்முடிபூண்டி ஈழத்து தமிழர் முகாம் முற்றிலும் அழிந்த நிலையில் உள்ளது.
ஆனால் அரசோ, மாவட்ட நிர்வாகமோ அம்மக்களை மீட்க எதுவும் செய்யாமல் மெத்தனமாக நடந்து வருகின்றனர்.
அம்மக்கள் உணவு, மின்சாரம், தண்ணீர் என அடிப்படைத் தேவைகள் இன்றி தவிக்கின்றனர். சோறின்றி இருண்ட வழக்கை வாழும் அம்மக்களை மீட்க இதுவரை எந்தப் பணிகளும் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்படவில்லை.
அம்மக்களின் வாழ்வாதாரம் மீட்க அவர்கள் மீது அரசின் பார்வையைச் செலுத்தச் செய்ய தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
அதன் முதற்கட்டமாக, முகாம்களின் பொறுப்புக்குரிய மறுவாழ்வு கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிக்க உள்ளார்கள். கூட்டமைப்பில் அங்கம் பெற்றுள்ள பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ஒன்றுகூடி இன்று காலை 11 மணிக்கு கடற்கரை எதிரே உள்ள எழிலகத்தில் மறுவாழ்வு ஆணையரைச் சந்தித்து முறையிட உள்ளார்கள்.
இதனை தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த அனர்த்தத்தை முதலில்தனது முகநூலூடாக தமிழ்நாட்டின் ஆவணப்பட இயக்குனரும், ஈழ ஆதரவாளருமான வ. கௌதமன் வெளியே கொண்டு வந்திருந்தார். கும்முடிப்பூண்டி முகாமிலும் , புழல் முகாமிலும் தங்கிருக்கும் நமது உறவுகள்தான் சொல்லமுடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
காரணம் அவர்கள் வசிப்பது கூரை வேய்ந்த அல்லது சாதாரண தார்ப்பாய் போட்ட மண் வீடுகள் என்பது தான். அங்கு பாதிக்கப்படும் மக்களுக்கு உடன் உதவுங்கள் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment