வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் இன்று 03.02.2017 அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடிதத்தின் முழுவிவரமும் வருமாறு:
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள், கடந்த 25.01.2017 அன்று தமது காணிகளை விடுவிப்பதாக அரசாங்க அதிகாரிகளும், பாதுகாப்பு தரப்பினரும் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, எட்டு வருடங்களின் பின்னர் தமது சொந்த நிலங்களை மீளப்பெற்றுக்கொள்வதற்காக மிகுந்த நம்பிக்கையுடனும் ஆவலுடனும் காத்திருந்தனர். ஆயினும் அவர்களுக்கு உரித்துடைய காணிகள் வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் கடந்த 31.01.2017இல் இருந்து நான்கு நாட்களாக 84 குடும்பங்கள் கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு விமானப்படை முகாமுக்கு முன்பாக குழந்தைகள், கர்ப்பிணித்தாய்மார்கள், முதியோர்கள் சகிதம் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இரவு பகலாக வீதியோரத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நானும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், விமானப்படை அதிகாரிகள் சகிதம் பொதுமக்களின் காணிகளை நேரில் பார்வையிட்டோம். குறித்த காணிகள் விமானப்படை தளத்திற்குள்ளோ, வனபரிபாலன திணைக்களத்திற்குள்ளோ வராதபடியால் குறித்த காணிகளை விடுவிப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. காணிக்குரிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிப்பத்திரங்களும் அந்த மக்களிடம் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்த மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய பணிப்புரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
0 comments:
Post a Comment