//]]>

Friday, February 24, 2017

என்னைக் கடத்திய வெள்ளை வான் உங்களிடம் அப்படியேதான் இருக்கின்றது


என்னைக் கடத்திய வெள்ளை வான் உங்களிடம் அப்படியேதான் இருக்கின்றது.

என் மகனை விடு...என் மகனை விடு என என் அம்மாவும், அப்பாவும் தங்கைகளும் உங்கள் காலைப்பிடித்துக் கதறக்கதற அவர்களின் பிடறியைப் பிடித்து சுவரோடு அடித்துவிட்டு வந்த கடத்தல்வீரர்களுக்கு இன்னமும் சம்பளமும், சொகுசு வாழ்க்கையும் கொடுத்துகொண்டிருக்கும் அரசு உங்களிடம் அப்படியேதான் இருக்கிறது.

என் கைகளைப் பின்னால் முறித்துக் கட்டி வாகனத்தில் கீழே போட்டு சில வீரர்கள் மிதிக்க, என் கண்களில் ரத்தம் கசிய மயங்கியதை கண்ணாடியில் பார்த்து ரசித்தபடி வாகனத்தை செலுத்திய சாரதி இன்னமும் அப்படியேதான் இருக்கிறார்.

கடத்தி வரும்போதே அரைமரணத்தைக் கடந்துவிட்ட என்னை தறதறவென இழுத்துச் சென்று கட்டித்தூக்கிய கயிறு இன்னமும் அவிழ்க்கப்படாமல் அப்படியேதான் இருக்கிறது.

என் ஒவ்வொரு உறுப்பையும் பிடுங்கி பிடுங்கி பதம்பார்த்த அத்தனைக் கருவிகளுக்கும் உரையிட்டு அப்படியேதான் பாதுகாக்கிறீர்கள்.

என்னிடம் உயிர் இருக்கிறது என்பதை நினைவுபடுத்தும் அம்மாவின், அப்பாவின் கதறல் சத்தம் உங்கள் முகாமுக்கு முன்னால் கேட்கும்போதெல்லாம், உங்கள் மகனை நாங்கள் கடத்தவில்லையெனப் பச்சைப்பொய் சொல்லும் மந்திரர்கள் சுதந்திரமாக அப்படியேதான் வலம்வருகின்றனர்.

நான் சாவதற்கு முதல்நாள், என்னை விடுவிப்பதற்கு 15 லட்சம் ரூபாய் கப்பம் கேட்டு கடிதம் எழுதி, உங்களால் முறிக்கப்பட்ட விரலை அழுத்திப் பிடித்து கையெழுத்து வாங்கியவர்களும் அப்படியேதான் இருக்கின்றனர்.

என்னைத் தேடுவதிலேயே எல்லாம் தொலைத்துவிட்ட அப்பா தன் சிறுநீரகத்தை விற்று உங்களிடம் தந்த பணத்தை கைக்கூசாமல் வாங்கிக்கொண்ட வீரர்கள் இன்னமும் அப்படியேதான் இருக்கின்றனர்.

கடைசியில் நான் கொல்லப்பட்டுவிட்டதைக்கூட சொல்ல இரக்கமற்ற விசாரணையாளர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள்.

உங்கள் எல்லாமே எந்த மாற்றமும் இல்லாம் அப்படியே இருக்க, என்னை விடுதலை செய்யச்சொல்லி தங்கை போராடுகிறாள். அவளையும் படம்பிடித்து சேமித்துவைத்துக்கொள்கின்றீர்கள்.

உங்களின் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்கிறேன், என்னைக் கடத்தியதுபோல அவளையும் கடத்திவிடாதீர்கள். உங்களிடமிருக்கும் ஏதாவதொரு துப்பாக்கியால் பின்னால் இருந்து ஒரே சூடாய் சுட்டுவிடுங்கள்.

என் விடுதலைக்காக விரதம் இருந்து விரதமிருந்து என்பும்தோலுமாகிய அவளின் உயிரை பறிக்க உங்கள் ஒரு ரவை போதும். என் செல்லத்தங்கை உங்கள் சித்திரவதைகளில் ஒன்றைக்கூட தாங்கமாட்டாள்.
-யாவும் கலப்படமற்ற கற்பனை சம்பந்தா...!

நன்றி: ஜெரா-

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment