யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்தல் - 2017 விரைவில் இடம்பெறவுள்ள நிலையில் யாழ்.பல்கலைக் கழக ஊழியர் சங்கம் இன்று குறித்த தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முக்கிய அறிவித்தலை உத்தியோகபூர்வ அறிக்கையொன்றின் மூலம் வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பல்கலைக்கழக ஊழிய சங்கதினரான நாமும், எமது ஆசிரிய சங்கத்தினரையும், விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தினரையும் போலவே புதிய துணைவேந்தர் தெரிவு குறித்து மிகவும் அக்கறை கொண்டுள்ளோம்.
பல அப்பாவி மக்கள் “மீண்டும்பேராசிரியர் துரைராஜா போன்ற ஒருவர் துணைவேந்தராக வேண்டும்” என்ற பெரிய கனவுடன் காத்திருப்பதை நாம்அறிவோம்.
இந்தக் கனவு மெய்ப்படவேண்டுமெனவே நாமும் எதிர்பார்க்கின்றோம் பிரார்த்திக்கின்றோம். ஆனால், பொறுப்புள்ள ஒரு தொழிற்சங்கம் என்ற வகையில் நிஜமான சூழ்நிலையை மீளவும் ஞாபகப்படுத்த வேண்டிய கடமை எமக்குண்டு.
1990 ஆம்ஆண்டுகளின் நடுப்பகுதியிலிருந்தே யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியானது, அதிகாரத்திலுள்ளஅரசியல்வாதிகளின் ஏவற்பொம்மையாகச் செயற்பட்டுத் தமது சுயநலன்களை நிறைவேற்றிக் கொள்ள விரும்புவோரின் விளையாட்டுக் குதிரையாக மாறிவிட்டது.
இந்தப்போக்கு 2008 – 2014 காலப்பகுதியில் அதன் உச்சத்தைத் தொட்டது . 2014 துணைவேந்தர் தேர்தலில் துணைவேந்தருக்கான பேரவையின் மூன்று தெரிவுகளையும் அச்சொட்டாக நிர்ணயிப்பதற்காக ‘டம்மி’ வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டார். ”
டம்மிக்கு’ எத்தனை வாக்குகள் அளிக்கப்படவேண்டும், துணைவேந்தராக வரவேண்டியவருக்கு எத்தனை வாக்குகள் அளிக்கப்படவேண்டும்?, மூன்றாவதாக வருபவர் குறைவாகவாக்குகளை பெறத்தக்கதாக இவ்வாக்குகள் எப்படி பிரிக்கப்படவேண்டும்? என்பதெல்லாம் பல்கலைக்கழகத்திற்கு வெளியே அரசியல் கட்சி அலுவலகமொன்றில் தீர்மானிக்கப்பட்டது.
குறிப்பிட்ட அரசியல் கட்சியின் கட்டளைகளை பெற்று வாக்களிப்பதற்காக மதிப்பிற்குரிய பேரவை உறுப்பினர்கள் அக் கட்சி அலுவலகம் சென்று கூட்டமொன்றில் கலந்துகொண்டனர். அக்காலகட்டத்தில் பேரவையின் முன்னான கூட்டங்கள் (Pre Council meeting) அக் கட்சி அலுவலகத்திலேயே நடைபெற்று வந்தன.
அதற்கு முன்னர் இடம்பெற்ற துணைவேந்தர் தேர்தலிலும் கல்விசாரா ஊழியரொருவர் ‘ டம்மியாக’ களமிறக்கப்பட்டாரெனினும் அப்போது ‘டம்மியை’ உபயோகப்படுத்த தேவை ஏற்படாதபடியால், ‘டம்மிக்கு’ வாக்குகள்எதுவும் அளிக்கப்படவில்லை.
2015இல் புதிய வெளிவாரி உறுப்பினர்களை கொண்ட பேரவை அமையபெற்றதெனினும், அநீதிகளுக்கு காரணமானவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுத் தண்டனை வழங்கப்படவில்லை.
இதனால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தவறானஆட்சேர்ப்பும் , ஆட்சேர்ப்பு வினாக்களை முற்கூட்டியே வேண்டியவர்களுக்கு தெரியபடுத்தும் போக்கும் இப்போதும்தொடர்கின்றன.
பல்கலைக்கழக மாணவர்கள் மீதான பழிவாங்கல்களும், பல்கலைக்கழக மாணவிகளுக்கு பாதுகாப்பற்றநிலையும் இன்னும் காணப்படுகின்றன.
இத்தகையதொரு பின்னணியிலேயே 2017இல் புதிய துணைவேந்தர் தேர்வு இடம்பெறுகிறது.
வாக்குகளைப் பிரயோகிக்கும்உரித்துடைய பேரவை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தமக்குரிய மூன்று வாக்குகளை பிரயோகிப்பது குறித்தும், அவற்றில்ஒன்றையோ இரண்டையோ பிரயோகிக்காமல் தவிர்ப்பது குறித்தும் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும்.
ஏனென்றால் “2008 -2014” காலப்பகுதிக்கு மீளத்திரும்பும் கனவுடனும் சிலர் காத்துள்ளனர். அவர்கள் துணைவேந்தர் தேர்தல் களத்திலும் உள்ளனர்.
இந்நிலையில் விண்ணப்பம் தாமதமாக கிடைத்தது எனக் காரணம் கூறித் தகுதி மிகக் கொண்டவர்களின் விண்ணப்பத்தை நிராகரிப்பதை நாம் விரும்பவில்லை.
இவ்விடயத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துடனும் , விஞ்ஞான ஆசிரியர்சங்கத்துடனும் நாமும் உடன்படுகிறோம்.
துணைவேந்தர் தெரிவு என்பது, சாதாரண ஆட்சேர்ப்பு அல்ல. நாம் சிறந்ததுணைவேந்தர் வேட்பாளரை தேடிச்செல்லவேண்டுமென்றே பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு சுற்றுநிருபங்கள்வலியுறுத்துகின்றன.
பேரவையால் நியமிக்கப்பட்ட ‘தேடற்குழு’ தேடல் தொடர்பாக ஆற்றிய பணிகள் யாதெனவும் அறிய விரும்புகிறோம்.
விண்ணப்ப முடிவு திகதிக்கு மூன்று வாரங்களுக்கு முன்னரே ஆறாவது விண்ணப்பம் பதிவுத்தபாலில் இடப்பட்ட நிலையில்,
முடிவுதிகதிக்கு ஒருவார இடைவெளிக்கு பின்னர் விண்ணப்பங்கள் அட்டவணைப்படுத்தப்படும் இறுதிக்கட்ட நிலையிலும் ஆறுவிண்ணப்பங்கள் மாத்திரமே கிடைத்த நிலையில், ஆறாவது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வதில் எந்த சட்டச் சிக்கலுமில்லையெனவே கருதுகிறோம்.
ஏழாவது விண்ணப்பம் எதுவும் கிடைத்திராத நிலையில் அவ்வாறுகிடைத்திருந்தால் என்ன செய்வதென்ற ஆதாரமற்ற அனுமானங்களின் அடிப்படையிலான hypothetical கேள்விகளுக்கு சட்டத்தில் இடமில்லை என்பதே எமது அபிப்பிரயாகும்.ஆறாவது விண்ணப்பதாரியின்
விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அவர் தனது திட்டங்களை முன்வைக்க மற்றவர்களைப்போலவே அவருக்கும் கால அவகாசம் வழங்கப்படவும் வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment