வடக்கின் முன்னணி வைத்தியசாலைகளில் ஒன்றான யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் பெண் நோயியல் மற்றும் மகப்பேற்றுக் கிளினிக் பிரிவு புதிதாக நிர்மாணிக்கப்பட்டு இன்று திங்கட்கிழமை(20) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முற்பகல்-10 மணி முதல் வைத்தியசாலையின் அத்தியட்சகர் யோ.திவாகர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஏழாலை களவாவோடை ஸ்ரீ வசந்த நாகபூஷணியம்பாள் ஆலயத்தினது பெருமளவு நிதிப் பங்களிப்பிலும், தெல்லிப்பழை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஒரு தொகை நிதிப் பங்களிப்பிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த கட்டடத்தை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ஏழாலை களவாவோடை ஸ்ரீ வசந்த நாகபூஷணியம்பாள் ஆலயத்தின் தர்மகர்த்தா வசந்த நாகபூஷணியம்மன் ஆகியோர் இணைந்து குறித்த கட்டடத்தைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தனர்.
இந்தக் கட்டடம் தொழிலாளர்களுக்குப் பதிலாக வைத்தியசாலையில் அமைய அடிப்படையில் கடமையாற்றும் சுகாதாரத் தொண்டர்களின் முற்று முழுதான ஆளணி வளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
குறித்த நிகழ்வில் வைத்தியசாலையின் சிரேஷ்ட மகப்பேற்று வைத்திய நிபுணர் ந.சரவணபவ, மகப்பேற்று வைத்திய நிபுணர் ம.வதனா, வைத்தியசாலையின் தாதிய பரிபாலகர் சோ.இராஜேந்திரன், நிர்வாக உத்தியோகத்தர் செல்வி- திருக்குமாரி கந்தசாமி, வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கச் செயலாளர் லயன் சி.ஹரிகரன்,முன்னாள் வலி. வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர்தன், இணுவில் இந்துக் கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் வி.சச்சிதானந்தன், வைத்திய சிகிச்சை நிபுணர்கள், வைத்திய உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், பணியாளர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
121 வறிய மாணவர்களுக்கு கல்வி புகட்டல், போரால் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்று வலுவுள்ளோருக்கான பல்வேறு உதவிகள் ஏழாலை களவாவோடை ஸ்ரீ வசந்த நாகபூஷணியம்பாள் ஆலயத்தின் ஊடாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நீண்டகாலத் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த கட்டடத்தைத் தமது பெருமளவு நிதிப் பங்களிப்பில் அமைப்பதற்கு மேற்படி ஆலயத்தினர் தமது பங்களிப்பினை வழங்கியுள்ளனர். புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண் நோ யியல் மற்றும் மகப்பேற்றுக் கிளினிக் பிரிவு நாளை மறுதினம் புதன்கிழமை முதல் இயங்க ஆரம்பிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறைந்த வளங்களுடன் இயங்கும் ஏழாலை களவாவோடை ஸ்ரீ வசந்த நாகபூஷணியம்பாள் ஆலய நிர்வாகத்தினர் நோயாளர் நலன்களைக் கருத்தில் கொண்டு தாமாக முன்வந்து குறித்த பிரிவை நிர்மாணிப்பதற்கு முன்வந்துள்ளமையானது முன்னுதாரணமான செயற்பாடெனப் பாராட்டியுள்ள வைத்தியசாலைச் சமூகம் ஏனைய ஆலயங்களும், பொதுநிறுவனங்களும் எமது வைத்தியசாலையில் நிலவும் ஏனைய வளப் பற்றாக்குறைகளைக் கருத்தில் உதவ வேண்டுமெனவும் கேட்டுள்ளது.
0 comments:
Post a Comment