யாழ். இணுவில் புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள உரும்பிராய் - மானிப்பாய் வீதியில் புகையிரதக் கடவையில் கடமையிலிருந்த உத்தியோகத்தரின் பொறுப்பற்ற செயற்பாட்டால் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தெய்வாதீனமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்று சனிக்கிழமை(25) மதியம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் புறப்பட்ட புகையிரதம் காங்கேசன்துறையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. வழமையாகப் பிற்பகல்-12.20 இற்கும் 12.30 அண்மித்த வேளையில் தான் குறித்த புகையிரதக் கடவையைக் கடந்து செல்வது வழமையாகும்.
ஆனால், இன்றைய தினம் பிற்பகல்-12.05 மணியளவிலேயே புகையிரதம் குறித்த கடவையைக் கடந்து சென்றுள்ளது. இந்தச் சமயம் குறித்த புகையிரதக் கடவையில் கடமையிலிருந்த உத்தியோகத்தர் அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்குச் சென்றிருந்தார். இதனால், புகையிரதம் செல்லும் போது வழமையாக வீதியைத் தற்காலிகத் தடுப்புப் போட்டு மறிக்கும் செயற்பாடு இடம்பெறவில்லை.
இந்த நிலையில் புகையிரதம் வருகிறது என்பதை அறியாமல் சில போக்குவரத்துச் சாரதிகள் குறித்த வீதியைக் கடக்க முற்பட்டுள்ளனர். எனினும், புகையிரதக் கடவைக்கு மிக நெருக்கமாகச் சென்ற சாரதிகள் புகையிரதத்தின் ஒலிச் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த நிலையில் மீண்டும் அங்கிருந்து பின்வாங்கினர்.
புகையிரதம் அங்கிருந்து சென்றதையடுத்து வர்த்தக நிலையத்தால் திரும்பி வந்த புகையிரத நிலைய உத்தியோகத்தருக்கும் போக்குவரத்து மேற்கொண்ட பொதுமக்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்துச் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அத்துடன் சம்பவம் தொடர்பாக விசாரணைகளையும் மேற்கொண்டனர்.
புகையிரத நிலைய உத்தியோகத்தரின் அலட்சியமான செயற்பாட்டைக் கண்டித்துள்ள பொதுமக்கள் தினமும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் போக்குவரத்துச் செய்யும் முக்கிய வீதியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடைய புகையிரதக் கடவை அமைக்க முன்வராத ரயில்வே திணைக்களத்தினையும் கடுமையாகச் சாடியுள்ளனர்.
0 comments:
Post a Comment