//]]>

Wednesday, March 8, 2017

சிவநேசனின் இழப்புக் கூட்டமைப்பின் தலைமைக்குப் பெரிய விடயமல்ல: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் சாடல்


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சிவநேசன் ஒரு சாதாரண பொதுமகனல்ல. அவர் மக்களால் அங்கீகரிக்கப்பட்டதொரு பாராளுமன்ற உறுப்பினராகவிருந்தவர். இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலிலேயே அவருடைய உயிர் பறிக்கப்பட்டது. இதுஅனைவருக்கும் தெரிந்த விடயம். அவரது படுகொலையைத் தம் கண்களால் கண்ட சாட்சியங்கள் எம்மத்தியிலுள்ளனர்.  இவ்வாறான நிலையிலும் மாமனிதர் சிவநேசனின் படுகொலை தொடர்பாக இதுவரை நீதி எதுவும் நிலைநாட்டப்படவில்லை. 

மாமனிதர் சிவநேசன் போன்றவர்களின் இழப்புக் கூட்டமைப்பின் தலைமைக்குப் பெரிய விடயமல்ல. அவர்களைப் பொறுத்தவரை இவ்வாறான இழப்புக்கள் தாங்க வேண்டிய சுமை. தங்களுடைய நலன்கள், தங்களின் எஜமான்களுடைய நலன்கள் தான் அவர்களுக்கு முக்கியம். தங்கள் பெறுமதியான உயிர்களை இந்த மண்ணின் விடிவிற்காகத் தியாகம் செய்த தியாகிகளினதும், இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுடையதும் நலன்கள் அவர்களுக்கு முக்கியமல்ல. இதனால் தான் படுகொலை செய்யப்பட்ட எமது மக்களுக்கும், மாமனிதர் சிவநேசன் போன்ற மக்கள் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைகளுக்கும் தொடர்ந்தும் நீதி மறுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் உணர்வாளருமான மாமனிதர் கிட்டினன் சிவநேசனின் ஒன்பதாவது ஆண்டு நினைவு நாள்  கடந்த திங்கட்கிழமை(06) பிற்பகல் யாழ்.கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சிவநேசன் படுகொலை செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் கழிந்தும் அவரது படுகொலை  தொடர்பாக எந்தவிதமான விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் மாத்திரமல்லாமல் தற்போதைய  ஆட்சிக் காலத்திலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளன.  

தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், போர்க்குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக் கூறல் நடைபெற வேண்டும், நீதி கிடைக்க வேண்டும், நியாயம் கிடைக்க வேண்டும் என  நாமும், எமது மக்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற போதிலும்  இவ்வாறான படுகொலைகளுக்கே நியாயம் வழங்க முடியாதவர்கள் எவ்வாறு ஏனைய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுத் தருவார்கள்?

ஆகவே, பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு உள்நாட்டு மட்டத்தில் உரிய நீதி கிடைக்கப் போவதில்லை எனத் தெரிந்த காரணத்தால் தான் தமிழ்மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்குச் சர்வதேச மட்டத்தில் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் கடந்த ஏழு வருட காலமாகத் தொடர்ச்சியாகப் போராடி வருகிறோம்.  இதன் இறுதி முயற்சியாகவே  ஐ.நா மனித உரிமைகள் பேரவை வரை எமது பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள 16 பாராளுமன்ற உறுப்பினர்களில் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்குப் பொறுப்புக் கூறல் தொடர்பாக இலங்கைக்குக் கால அவகாசம் வழங்க வேண்டாம் எனக் கருத்துத் தெரிவித்திருந்த போதிலும் கூட்டமைப்பின் தலைமை தொடர்ந்தும் இரண்டு வருடங்கள் இலங்கைக்குக் கால அவகாசம் வழங்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாகவுள்ளது. 

இராணுவம் என்பது ஆட்சியைக் கைப்பற்றும் எந்தவொரு அரசாங்கத்திற்கும் பொதுச் சொத்தாகக் காணப்படுகின்றது. ஆகவே, அவ்வாறான இராணுவத்திற்கு எதிராக எவரொருவர் ஆட்சிக்கு வந்தாலும் செயற்படப் போவதில்லை என்பதே யதார்த்தம். 

ஆகவே, இலங்கையில் நடைபெற்று முடிந்த இனப்படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் அனைத்தையும் மூடி மறைத்து, சம்பந்தப்பட்ட தரப்புக்களைத் தொடர்ந்தும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு அரசியல் மோசடி செய்யும் தலைமையை எமது மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சரியான தீர்வைப் பெற்றுத் தரக் கூடிய, தமிழ்மக்களின் நலன்களைப் பிரதிபலிக்கக் கூடியவர்களை இனங்கண்டு அவர்களுக்கு முழுமையாக ஆதரவளிக்க முன்வருவதே மாமனிதர் சிவநேசன் போன்றவர்களுக்கு நாங்கள் செய்கின்ற உண்மையான அஞ்சலியாகும் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment