//]]>

Friday, March 31, 2017

யாழில் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம்: மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில் (Photos)


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நேற்றுக் காலை பல்கலைக்கழகத்துக்கு முன்பாகவுள்ள இராமநாதன் வீதியில் ஆரம்பித்த நிர்வாக அடக்கு முறைகளுக்கெதிரான சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை(31) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

பல்கலைக்கழக நிர்வாகத்தால் 13 கலைப்பீட மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கலைப்பீட மாணவர்கள் கடந்த புதன்கிழமை வகுப்புக்களைப் புறக்கணித்து அடையாள எதிர்ப்புப் போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் முதல் வகுப்புத் தடை விதிக்கப்பட்ட 13 மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு முன்பாகச் சாகும் வரையான போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களிற்கு ஏனைய கலைப்பீட மாணவர்களும் தமது ஆதரவினைத் தெரிவித்துப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மூன்று மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று முற்பகல்-11.30 மணியளவில் அம்புலன்ஸ் மூலம் இந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து நிலையில் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார். 

அத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேலும் சில மாணவர்களின் உடல் நிலை மோசமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment