//]]>

Saturday, April 15, 2017

சிகை ஒப்பனை நிலையங்களிற்குப் படையெடுத்த மக்கள் கூட்டம்: வசூல் அமோகம்


யாழ். வலிகாமம் பகுதியில் இயங்கி வரும்  சிகை ஒப்பனை நிலையங்களிற்கு(சலூன்) சித்திரைப் புத்தாண்டுக்கு முன்தினமான நேற்று முன்தினம் வியாழக்கிழமை(13) அதிகளவானோர் வருகை தந்தமையால் வழமையை விட அதிக வருமானம் கிடைத்துள்ளதாக மேற்படி நிலைய உரிமையாளர்கள் இன்று மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். 

தமிழ்-சிங்களச் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ்.குடாநாட்டிலுள்ள சிகை ஒப்பனை நிலையங்கள் அனைத்தினதும் நேரக் கட்டுப்பாடு இந்தமாதம் 08 ஆம் திகதி 13 ஆம் திகதி வரை தளர்த்தப்பட்டிருக்குமென யாழ். மாவட்டச் சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றியம்  தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்தினமான நேற்று முன்தினம் யாழ். வலிகாமம் பிரதேசத்திலுள்ள சிகை ஒப்பனை நிலையங்கள் அனைத்திலும் வழமையை விட அதிகளவு மக்கள் முடி வெட்டுவதற்கும், முகச்சவரம் செய்வதற்கும் வருகை தந்தமையால் பல சிகை ஒப்பனை நிலையங்கள் இரவு-10 மணியைத் தாண்டியும் இயங்கின. 

இதனால், வழமையாக 2000 முதல் 2500 ரூபா வரை வருமானமாகப் பெற்ற தாம் நேற்று முன்தினம் மட்டும் 5000 ரூபா வரை வருமானமாகப் பெற முடிந்ததாக வலிகாமம் பகுதி  நிலையங்களின்  உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், தாம் இந்த வருட சித்திரைப் புத்தாண்டை மகிழ்ச்சியாகக் கொண்டாடியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ். மாவட்டச் சிகை ஒப்பனை நிலையங்களிற்கு வழங்கப்பட்டிருந்த நேரக் கட்டுப்பாட்டுத் தளர்வு நேற்று-14 ஆம் திகதி முதல் மீண்டும் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி நாளை ஞாயிற்றுக்கிழமை வழமை போன்று யாழ். மாவட்டச் சிகை ஒப்பனை நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment