தமிழ்மக்களை தடம்பெயரவைக்க இன்று பல தகாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் ஒரு கட்டமாக நடைபெறாத நிகழ்வுகளை நடந்ததாகக் கூறி எம்மக்கள் மனதில் நடுவிக்க பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்மக்கள் பேரவையின் சிறப்புக் கூட்டம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 30.07.2017 காலை யாழ். நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில்,
நாட்டின் அரசியல் ரீதியான முன்னேற்றங்கள் தறி கெட்டும், தடைபட்டும், தாமதப்பட்டும் இருக்கும் இந்த நேரத்தில் எமது சிந்தனைகளும் சிரத்தைகளும் சீராக அமைய வேண்டும் என்று அபிப்பிராயப்படுகின்றோம்
தற்போது எமது மக்களுக்கிருக்கும் ஒரே அரசியல் ரீதியான புரிந்துணர்வு கட்சி சார்பானதே. அல்லது தனித் தலைவர்கள் சார்பானதே. எமது இயக்க ரீதியான பயணமானது எமது தமிழ் மக்களை அரசியல் புரிந்துணர்வின் மூலம் ஐக்கியப்படுத்த வேண்டும் என்று நாம் எதிர் பார்க்கின்றோம்.
மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களை அசைக்க முடியாத அரசியல் அஸ்திவாரத்தில் அடி நாட்ட வேண்டும் என்று நாம் அபிப்பிராயப்படுகின்றோம்.
சந்து பொந்துகளுள் வாழும் எம் மக்கள் மத்தியில் அரசியல் அறிவை எடுத்துச் சென்று அவர்களை அரசியல் ரீதியாக ஆற்றுப்படுத்த ஆவன செய்ய வேண்டும் என்று அபிப்பிராயப்படுகின்றோம்
மாவட்ட ரீதியாக தமிழ் மக்கள் பேரவை மக்களிடையே அரசியல் அறிவைப் பரப்ப ஆவண செய்யலாம் என்று அபிப்பிராயப்படுகின்றோம்.
முதலில் எமக்குள் சில அரசியல் அடிப்படைகள் அறிவுறுத்தப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் நாம் அரசியல் யாப்புப் பற்றி அரசுக்கு எமது முன்மொழிவுகளை முன் வைத்த போதே அவ்வாறான அடிப்படைகளை அறிவித்து விட்டோம்.
அவற்றை ஆழச் சிந்தித்து ஆவணமாக அச்சேற்றி எம் மக்கள் மத்தியில் அலசி ஆராய விட வேண்டும். கூட்டங்கள் போட்டு அரசியல் ரீதியாக நாம் எதிர் பார்ப்பனவற்றை அடையாளங் காண முன்வர வேண்டும்
எம்மைப் பொறுத்த வரையில் எந்த மதத்திற்கும் முன்னுரிமை வழங்க வேண்டிய அவசியமேதுமில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏழு மாகாணங்களில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்குவதென்பது அவர்களின் விருப்பம்.
இப்படியான கேள்விகள் பல எம்மால் விடை காணப்பட வேண்டும். எம் மக்களிடையே அரசியல் அறிவைப் பரப்ப மாவட்டந் தோறும் எமது தொடர்பாடல் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டும். அவர்களை வழி நடத்த எமது இயக்கம் ஒரு விசேட அரசியல்க் குழுவை நியமிக்க வேண்டும்.
இக் குழுவே தொடர்பாடல் பிரதிநிதிகளுக்கு தமிழ் மக்கள் பேரவையின் கருத்துக்களை வலியுறுத்தி வைப்பர். தொடர்பாடல் பிரதிநிதி நாம் அமைக்கப் போகும் ஒரு மாவட்டக் குழுவுடன் இணைந்து அரசியல் அறிவு பரவலை அந்தந்த மாவட்டத்தில் இயற்றி வைப்பார்.
ஒரு சஞ்சிகைக் குழு இவர்களுக்கு இணையனுசரணையாகச் செயற்படும். எம்மைத் தடம் பெயர வைக்க தகாத நடவடிக்கைகள் பல இன்று எடுக்கப்பட்டு வருகின்றன.
நடவாத நிகழ்வுகளை நடந்ததாகக் கூறி நஞ்சை எம் மக்கள் மனதில் நடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே எம்மிடையே ஒற்றுமை இருத்தல் அவசியம். “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை இன்றேல் எல்லோர்க்குந் தாழ்வு”. இதை நாம் மறத்தல் ஆகாது.
கொள்கைகளில் நாங்கள் இறுக்கமாக இருப்போம். எமது நடவடிக்கைகளில் எமது நம்பகத்தன்மையை வலியுறுத்துவோம். ஆனால் எமது மனங்களில் இருக்கும் வன்மத்தைக் களைவோம். என்று வடக்கு முதலமைச்சர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment