//]]>

Saturday, August 5, 2017

பொய்யான பதில்கள் வழங்கியதாக வடமாகாணக் கல்விப் பணிப்பாளருக்கெதிராக மேன்முறையீடு


வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் தனது முறைகேடான நியமனத்தை மூடிமறைப்பதற்காகத்  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியரொருவரால் கேட்கப்பட்டிருந்த தகவல்களுக்குப்  பொய்யான பொருத்தமற்ற பதில்களை வழங்கியுள்ளதாகத் தகவல் அறியும் ஆணைக்குழுவின் தலைவருக்குத் தெல்லிப்பழைப் பகுதியைச்  சேர்ந்த ஆசிரியரொருவரால் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் அதிபர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த தரம்-3 அதிபர்களுக்கு பாடசாலைகளுக்கு நியமனம் வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில்  நியமனம் வழங்கப்பட்ட அதிபர்களைச் சுயவிருப்ப இடமாற்றம் போன்று அச்சுறுத்தி அவர்களிடமிருந்து கடிதம் பெற்று வேறு பாடசாலைகளுக்குப் புதிய அதிபர்களை இடமாற்றி  அதிபர் வெற்றிடமேற்படுத்தப்பட்ட அதே பாடசாலைகளுக்கு விண்ணப்பம் எதுவும் கோரப்படாமல் ஆசிரியர் சேவையிலுள்ளவர்களுக்கு முறைகேடான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

1998 /23 கல்வியமைச்சின் சுற்று நிருபத்தின் அடிப்படையில் அதிபர் வெற்றிடம் ஏற்படும் பட்சத்தில் விண்ணப்பம்கோரி நேர்முகத்தேர்வின் அடிப்படையிலேயே வெற்றிடம் நிரப்பப்படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு வடமாகாண கல்வித் திணைக்களத்தால் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இதனடிப்படையில், 27.06.2017 அன்று இவை தொடர்பான தகவல் கோரித் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் குறித்த ஆசிரியரால் வடமாகாணக்  கல்வித் திணைக்களத் தகவல் அறியும் உத்தியோகத்தரிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. அதில், போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த அதிபர்களுக்குப்  பாடசாலைகள் வழங்கப்பட்டு அவர்கள் அப்பாடசாலையிலிருந்து நீக்கப்பட்டு  ஆசிரியர் சேவையிலுள்ளவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறு நியமிக்கப்பட்ட பாடசாலைகளின் விபரம் மற்றும் எந்தச் சுற்றுநிருபத்துக்கமைய நியமனம் வழங்கப்பட்டது?, அவ்வாறு நியமிக்கும் அதிகாரம் வடமாகாணக் கல்விப்பணிப்பாளருக்கு உள்ளதா? போன்ற வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அதன் பதிவிலக்கமாக  RTI/01/06 என வழங்கப்பட்டது. 

இந்த வினாக்களுக்கான பதில் 14 நாட்களுக்குள் வழங்கப்படவேண்டும் எனச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தும் 21 நாட்களின் பின்னரே 19.07.2017 பதில் வழங்கப்பட்டது. அந்தக் கடிதத்தில் குறித்த ஆசிரியரால் கோரப்பட்டிருந்த தகவல்களுக்குப்  பதில் வழங்காமல் 'பரீட்சையில் சித்தியடைந்த அதிபர்களுக்கு குறித்த வலயக்கல்விப் பணிப்பாளர்களின் சிபார்சின் அடிப்படையில் பாடசாலைகள் வழங்கப்பட்டன. அவ்வாறு நிலை நிறுத்தப்பட்ட ஆசிரியர்களில் சிலர் சுயவிருப்பின் பேரில் சேவை நிலைய மாற்றம் பெற்றுக்கொண்டனர் என்பதைத் தங்களுக்குத் தெரிவிக்கின்றேன்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.   

இந்நிலையில் மேற்படி ஆசிரியர் தன்னை ஏமாற்றும் விதமாகவே தகவல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளதுடன் வடமாகாணக் கல்வித்திணைக்களத்திடம் நான் கோரியுள்ள விடயங்களுக்குக்குப் பொருத்தமான தகவல்களைப் பெறத் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட ஆசிரியரால் கொழும்பு -07 இல் அமைந்துள்ள தகவல் அறியும் ஆணைக்குழுவின் தலைவருக்கு மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment