கடந்த சில தினங்களுக்கு முன்னர் எமது கோரிக்கையையும், போராட்டத்தின் நியாயப்பாடுகளையும் வலியுறுத்தி வடமாகாண முதலமைச்சர், வடமாகாண ஆளுநர். வடமாகாண அவைத்தலைவர், வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பியனர் அங்கஜன் இராமநாதன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கோப்பாய்ப் பிரதேச செயலர், வலி. கிழக்குப் பிரதேச செயலர் போன்ற பல்வேறு தரப்பினருக்கும் மகஜர்கள் கையளித்துள்ளோம். ஆனால், எமது கோரிக்கைகள் இதுவரை எந்தவொரு தரப்பினராலும் கவனத்தில் கொள்ளப்படாமை மிகுந்த மன வேதனையைத் தருகிறது என மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்றக் கோரிப் போராடும் மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்றக் கோரி சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். புத்தூர் மேற்கு கிராம மக்கள் மண்டபத்திற்கு முன் ஆரம்பமான மாபெரும் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்று வெள்ளிக்கிழமை(04) 24 ஆவது நாளாகவும் தீர்வின்றி நடைபெற்றது.
வடக்கு மாகாண சபையே! மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்று', 'மக்களின் வாழ்விடச் சூழலைப் பாதுகாத்துக் கிராமியக் கட்டமைப்பை வலுப்படுத்து' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்று வரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள பொதுமக்களே இவ்வாறு ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியி லுள்ள மயானங்களை அகற்றக் கோரி நாங்கள் இரவு பகலாகத் தொடர்ச்சியாகப் போராடி வருகிறோம். மயானங்கள் அகற்றப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வடமாகாண சபையிடம் நாங்கள் ஏற்கனவே பல்வேறு தடவைகள் முன்வைத்துள்ளோம்.
எங்கள் போராட்டம் ஆரம்பமாகிப் பல நாட்கள் கடந்த போதும் வடமாகாண முதலமைச்சர் போராட்டக் களத்திற்கு நேரடியாக வருகை தந்து எங்களுடன் கலந்துரையாடாமை எங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது
எங்களுடைய போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்பதாவது நாளில் போராட்டக் களத்திற்கு வருகை தந்திருந்த வடமாகாண ஆளுநர் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் மயானங்கள் காணப்படுவதால் மக்களுக்குப் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே, நான் இந்த விடயம் தொடர்பாக உடனடியாக மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்திருந்தார்.
ஆனால், இதுவரை மயானங்களை அகற்றுவதற்கான எந்தவொரு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை. இதனால் எமது மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். வடமாகாண ஆளுநரும் எமது அரசியல் வாதிகள் போன்று செயற்படுகின்றாரா? என அச்சப்பட வைத்துள்ளது எனவும் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment