//]]>

Monday, September 18, 2017

கிராம மக்களை நீதிமன்றத்திற்கு அழைத்த யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி வழங்கிய அதிரடி உத்தரவு


புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கும், இறந்தவர்களின் உடலங்களைக் குறித்த மயானத்தில் எரிப்பதற்கும் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிந்துசிட்டி மயானப் புனரமைப்புத் தொடர்பில் மல்லாகம் மாவட்ட நீதவானால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கெதிராக புத்தூர் கலைமதி கிராம மக்கள் சார்பாக கலைமதி சனசமூக நிலைய நிர்வாகத்தினரால்  யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு  இன்று திங்கட்கிழமை(18) முற்பகல்-10.30 மணிக்கு மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன் போது தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு அச்சுவேலிப் பொலிஸார், கிராம சேவகர் ஊடாகப் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அனைவரையும் மன்றுக்கு வருமாறு தெரிவித்து வழக்கு விசாரணையைப் பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார்.  

இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்றுள்ள 300 வரையான கிராம மக்கள் முன்னிலையில் குறித்த வழக்கு மீண்டும் பிற்பகல்-01 மணியளவில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போதே நீதவான் மேற்கண்டவாறு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

வழக்குத் தொடுநர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி தம்பையா புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயானத்தை அண்மித்த பகுதியில் நான்கு மயானங்கள் அமைந்திருப்பதாக நீதவானின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். அவரது கருத்தைக் கவனத்தில் கொள்வதாக நீதவான் தெரிவித்தார். 

மேலும், மயானத்தை அகற்றக் கோரி இதுவரை காலமும் அமைதியான முறையில் போராடிய மக்களுக்குப் பாராட்டுத் தெரிவித்த நீதவான் சம்பந்தப்பட்ட அரசாங்கத் திணைக்களங்களுடன் தொடர்பு கொண்டு மயானத்தை வேறு இடங்களுக்கு மாற்றுவது தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துளளார் அத்துடன் மக்களின்  போராட்டத்தைக் கைவிடுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். 

இதேவேளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாயணங்களை அகற்றக் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களைச்  சந்தித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மக்களின் கருத்துக்களைக் கவனமாகச் செவிமடுத்தார். பின்னர்  போராட்டத்தில் பங்கேற்றுள்ள மக்களின் உணர்வுகளை மதிப்பதாகத் தெரிவித்ததுடன், குறித்த பகுதியில் அமைந்திருக்கும் மயானம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ளமையால் தாம் அரசியல் சார்ந்த முடிவுகளை உடனடியாக எடுக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment